புளியந்தோப்பு காவல் சரகத்தில்: சிசிடிவி கேமரா அமைப்பதாக போலீசார் வசூல் வேட்டை

பெரம்பூர்: புளியந்தோப்பு மற்றும் வண்ணாரப்பேட்டை காவல் சரகங்களுக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த உள்ளதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபட்டு  வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து, வாகன சோதனை மற்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், செயின் பறிப்பு, வழிப்பறி,  வீடுகளில் கொள்ளை, பைக் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில், சென்னையில் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த, கடந்த 2016ம் ஆண்டு  அரசு சார்பில் 570 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி முக்கிய சாலைகள், சிக்னல்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. தி.நகர், பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீஸ் கமிஷனர்  செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். அதை தொடர்ந்து குடியிருப்பு பகுதிகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில்,  வண்ணாரப்பேட்டை மற்றும் புளியந்தோப்பு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த கமிஷனர் உத்தரவிட்டுள்ளதால், அதற்கு நிதி தேவைப்படுவதாக மேற்கண்ட காவல் சரக போலீசார், கடைகள்,  வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு பணம் கொடுக்க மறுப்பவர்களிடம், போலீசார் மிரட்டும் தொணியில் பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, உங்களது வீடு, கடைகளில் கொள்ளை சம்பவம் நடந்தால், புகார் அளிக்க எங்களிடம் தானே வர  வேண்டும். அப்போது பார்த்துக்கொள்கிறோம், என பணம் தர மறுப்பவர்களிடம் போலீசார் மிரட்டுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பொது இடங்களில் சிசிடிவி கேமரா அமைக்க அரசு 570 கோடி நிதி  ஒதுக்கியது. இதில், ஒரு சில இடங்களில் மட்டுமே பணி நடைபெற்றது. இதற்காக ஒதுக்கிய நிதி என்ன ஆனது.

 

தற்போது, பெரம்பூர், கொடுங்கையூர், பெரவள்ளூர், ஓட்டேரி, எம்.கே.பி.நகர், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை, திருவெற்றியூர் ஆகிய பகுதிகளில் வியாபரிகள், பொதுநல சங்கங்கள், தனியார்  அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், கடைகள், குடியிருப்பு சங்கங்கள் ஆகியோரிடம் போலீசார் கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர். பணம் தர மறுத்தால், மிரட்டல் விடுக்கும் தொணியில் பேசுகின்றனர். எனவே,  இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: