உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மாநிலங்கள் செயல்படுத்த வேண்டும் : தலைமை நீதிபதி வலியுறுத்தல்

புதுடெல்லி: பசு பாதுகாவலர்கள் மற்றும் கூட்டு வன்முறையில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் பின்பற்ற வேண்டும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கேட்டுக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் பல பகுதிகளில் பசு மாடுகளை வாகனங்களில் ஏற்றிச் செல்பவர்கள் மீது பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் கும்பல் தாக்குதல் நடத்தி வந்தன. இதை தடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதில், கடந்த ஜூலை 17ம் தேதி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், ‘‘மக்கள் கூட்டாக சேர்ந்து வன்முறையில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது.

இதை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். கூட்டு வன்முறை சம்பவங்களை தடுக்க மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் எஸ்.பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமித்து, கூட்டு வன்முறையை தடுக்க வேண்டும். இந்த அதிகாரிகள் சிறப்பு குழுவை அமைத்து பொய் செய்தி மற்றும் வெறுப்பு பேச்சுக்களை பரப்புபவர்கள் பற்றி தகவலை் சேகரிக்க வேண்டும்’’ என கூறியது. ஆனால் இந்த உத்தரவுகளை பல மாநிலங்கள் பின்பற்றியதாக தெரியவில்லை.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பூனாவாலா உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். கூட்டு வன்முறை சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த 3 நாளில் ராஜஸ்தான் ராம்கர் மாவட்டத்தில் லல்வாண்டி கிராமத்தில் ரக்பர் கான் என்ற விவசாயியும், அவரது நண்பர் அஸ்லாம் எனபவரும் இரண்டு பசுக்களை வாகனத்தில் ஏற்றி சென்றனர். அவர்களை பசுவதை செய்பவர்கள் என நினைத்து ஒரு கும்பல் தாக்கியது. இதில் 28 வயது ரக்பர் கான் பலியானார். உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத ராஜஸ்தான் தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திராசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் ‘‘கூட்டு வன்முறை சம்பவத்தை கட்டுபடுத்துவது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற அறிக்கையை மிசோரம், தெலங்கானா, மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், டெல்லி உட்பட 8 மாநிலங்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை. சட்டத்தை கையில் எடுத்து கூட்டு வன்முறையில் ஈடுபட்டால், சட்டத்தின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை மக்கள் உணர வேண்டும்.

இந்த மாநிலங்கள் 3 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு 2 வாரத்துக்குப்பின் விசாரிக்கப்படும்’’ என கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: