கடந்த நான்கு ஆண்டுகளில் 35 புதிய விமான நிலையங்கள் : பிரதமர் பெருமிதம்

பாக்யாங்: ‘‘கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 35 புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது’’ என்று பிரதமர்  நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் வான்வழி போக்குவரத்தில் இணைக்கும் வகையில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. விமான நிலையம் அமைப்பதற்காக கடந்த 2009ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 201 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 4500அடி உயரத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பசுமை விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

திறப்பு விழாவிற்கு பின்னர் பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்த நாள் சிக்கிம் மாநிலத்துக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நாள். இந்த விமான நிலையத்தோடு நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து கடந்த 2014ம் ஆண்டு வரை 65 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் கூடுதலாக 35 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ஒரு விமான நிலையம் என்ற விகிதம் தற்போது ஆண்டுக்கு சராசரியாக  9 விமான நிலையங்கள் என்ற நிலைக்கு மாறியுள்ளது.

1970ம் ஆண்டுகளில் நாட்டில் 400 விமானங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், கடந்த ஒரு ஆண்டில் பல்வேறு விமான நிறுவனங்களால் 1000 புதிய விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. சாதாரண ஹவாய் செருப்பு அணிந்திருக்கும் மனிதரும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த அரசு முயற்சி எடுத்து வருகின்றது.  

இந்தியாவின் வளர்ச்சிக்கான உந்துசக்தியாக வடகிழக்கை மாற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளோம். இந்தியா சுதந்திரம்  பெற்ற பிறகு வடகிழக்கில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் விமானம் மற்றும் ரயில்போக்குவரத்து மூலம் இணைப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமான நிலையம் தேவை என்ற சிக்கிமின் கனவு அடிக்கல் நாட்டப்பட்டு 9 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. பசுமை விமான நிலையம் என்பது பிற பகுதிகளை இணைப்பதற்காக மட்டும் அல்ல. சுற்றுலா மற்றும் மாநில பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியிலான விமான போக்குவரத்து அக்டோபர் 4ம் தேதியில் இருந்து தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: