ஏழைகளின் பணத்தை பறித்து அம்பானியிடம் தந்துள்ளார் மோடி : ராகுல் காந்தி மீண்டும் சரமாரி குற்றச்சாட்டு

அமேதி: ‘‘ஏழைகளின் பணத்தை பறித்து அம்பானியிடம் மோடி கொடுத்துவிட்டார்’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி மீது புதிய குற்றச்சாட்டை சுமத்தினார். அங்கு ஜெய்ஷ் என்ற இடத்தில் அவர் பேசியதாவது:ஏழைகள், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்கள், ராணுவ வீரர்கள் ஆகியோரது பைகளில் இருந்து ₹20 ஆயிரம் கோடியை பறித்த இந்த நாட்டின் பாதுகாவலர் (மோடி), தொழில் அதிபர் அனில் அம்பானியிடம் கொடுத்து விட்டார். இதில் ஊழல் நடக்கவில்லை என்றால் ரபேல் போர் விமானத்தின் விலையை அவர் மறைப்பது ஏன்? மேலும் ரபேல் போர் விமானம் தயாரிக்கும் ஒப்பந்தம் எந்த அடிப்படையில் அனில் அம்பானிக்கு வழங்கப்பட்டது? பிரதமர் மோடி மீது பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோசிஸ் ஹாலண்டே தெரிவித்து இருக்கும் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது பிரதமர் மோடியால் என் கண்களைப் பார்க்க முடியவில்லை. இதுதொடர்பாக பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். ஆனால் அதில் எந்த பதிலும் இல்லை. இந்த ஊழல் தொடர்பாக பதில் அளிக்கும் தைரியம் இதுவரை அவருக்கு இல்லை. மோடியின் ஆட்சியில் ஏழைகள், விவசாயிகள் தினம் தினம் அழுகிறார்கள். அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்ளவில்லை. இந்த அரசின் அனைத்து சலுகைகளையும் 5 முதல் 10 நபர்கள் மட்டும் பெற்றுவருகிறார்கள். அனில் அம்பானி, விஜய் மல்லையா, லலித் மோடி போன்றவர்கள் மட்டுமே பயன்பெற முடிகிறது. இவ்வாறு பேசினார். வீடியோ வெளியிட்டார்: இதற்கிடையே, பிரான்சின் முன்னாள் அதிபர் ஹாலண்டேவை பேட்டி எடுத்த ‘மீடியாபார்ட்’ என்ற ஆன்லைன் செய்தி நிறுவனம் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வீடியோ வெளியிட்டுள்ளது. அதை தனது டிவிட்டர் பதிவில் நேற்று வெளியிட்ட ராகுல்காந்தி, ‘‘திருட்டின் இந்திய தளபதி பற்றி சோகமான உண்மை’’ என குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் ‘மீடியா பார்ட்’ ஆசிரியர், ரபேல் ஒப்பந்தம் குறித்து ஹாலண்டே கூறியதையும், ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய அரசு தான் பரிந்துரைத்ததாகவும் விளக்குவதாக உள்ளது.

‘அரசியல் ஆதாயத்திற்காக புகார்’; பாஜ தலைவர்கள் ஆவேசம்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில், ‘‘ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே அளித்த விளக்கத்திற்கு பின் நடந்த ஆய்வில் இந்த ஒப்பந்தத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அடுத்த ஆண்டு வரும் மக்களவை தேர்தலில் அரசியல் ஆதாயம் அடைவதற்காக காங்கிரஸ் ரபேல் ஒப்பந்தத்தை கையில் எடுத்துள்ளது. ஏனெனில் இந்த அரசு மீது வேறு எந்த புகாரையும் அவர்கள் தெரிவிக்க முடியவில்லை’’ என்றார். எதிர்க்கட்சிகளுக்கு பயம்: பாஜ தேசிய தலைவர் அமித்ஷா ஒடிசா மாநிலம் பூரியில் நடந்த மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசுகையில், ‘‘பிரதமர் மோடி புதிய இந்தியாவை உருவாக்க உழைத்து வருகிறார். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியாவை துண்டாட ஒன்றிணைந்து வருகின்றன. மோடி ஏழ்மையை விரட்ட உழைக்கிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் மோடியை நீக்க நினைக்கின்றன. அவர்களது ஒரே குறிக்கோள் மோடியை வீழ்த்துவதுதான். ஏனெனில் எதிர்க்கட்சிகளுக்கு மோடி பயம் பிடித்துள்ளது’’ என்றார்.திக்குதெரியாத தலைவர்: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் நேற்று ஜெய்ப்பூரில் கூறுகையில், ‘‘ராகுல்காந்தி எந்த ஒரு திக்குதிசையும் தெரியாத தலைவர். ஏனெனில் ரபேல் போர் விமானம் குறித்த குற்றச்சாட்டுகளை வைத்து ஊழல் நடந்ததாக கூறமுடியாது. ராகுலிடம் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆவணமோ, ஆதாரமோ எதுவும் இல்லை.’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: