சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.31 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் கடந்த 9ம் தேதி மற்றும் 23ம் தேதி நடந்த சிறப்பு முகாம்களில் 6.31 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். வருகிற அக்டோபர் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.1.1.2019-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த 1ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. வருகிற ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றமும் செய்யலாம். அலுவலக நாட்களில், உள்ளாட்சி அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் காலை முதல் மாலை வரை வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரியிடம் விண்ணப்பத்தை பெற்று பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும், அலுவலகம் செல்பவர்களுக்கு வசதிக்காக, 9.9.18, 23.9.18, 7.10.18 மற்றும் 14.10.18 ஆகிய ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, முதல் சிறப்பு முகாம் கடந்த 9ம் தேதி நடந்தது. முகாமில் பெயர் சேர்க்க 3,05,241 பேரும், நீக்கம் செய்ய 20,423 பேர், திருத்தம் செய்ய 34,109 பேர், முகவரி மாற்றம் செய்ய 23,460 பேர் என மொத்தம் 3 லட்சத்து 83 ஆயிரத்து 233 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்நிலையில், 2வது கட்ட சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் பெயர் சேர்க்க 2,94,970 பேரும், நீக்கம் செய்ய 21,432 பேர், திருத்தம் செய்ய 34,585 பேர், முகவரி மாற்றம் செய்ய 25,950 என மொத்தம் 3 லட்சத்து 76 ஆயிரத்து 937 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறும்போது, “வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த 9ம் தேதி மற்றும் 23ம் தேதி சிறப்பு முகாம் நடந்தது. இந்த இரண்டு முகாம்களில் மொத்தம் 8,25,260 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதில் பெயர் சேர்க்க 6,31,127 பேரும், நீக்கம் செய்ய 51,233 பேர், திருத்தம் செய்ய 89,194 பேர், முகவரி மாற்றம் செய்ய 53,663 பேர், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 43 பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயர் சேர்க்க, நீக்கம் செய்வது உள்ளிட்ட விண்ணப்பித்த 8.25 லட்சம் பேரின் விண்ணப்பங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.

இதையடுத்து விண்ணப்பித்தவர்களின் வீடு வீடாக சென்று களஆய்வு செய்தபிறகு புதிய பட்டியலில் சேர்க்கப்படும். புதிய வாக்காளர் பட்டியல் 2019ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து புதிய வாக்காளர்களுக்கு கலர் படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும். மேலும், வருகிற அக்டோபர் 7ம் தேதி மற்றும் 14ம் தேதி ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். விடுபட்டவர்கள் அப்போது தங்களது பெயர்களை சேர்க்கலாம். அதேபோன்று, மற்ற அலுவலக நாட்களிலும் அக்டோபர் 31ம் தேதி வரை பெயர் சேர்க்கலாம். கடந்த 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை மட்டும் 29,762 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: