ஜெ., மருத்துவக் குறிப்புகள் உண்மை : அப்போலோ டாக்டர், செவிலியர்கள் திடீர் பல்டி

சென்னை: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த அனைத்து  அப்போலோ மருத்துவ ஆவணத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து குறிப்புகளும் தான் உண்மைதான் என்று டாக்டர்கள், செவிலியர்கள் திடீர் பல்டி அடித்ததால் விசாரணை ஆணையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து தமிழக அரசு சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் நேற்று  காலை 10 மணியளவில் அப்போலோ டாக்டர்கள் ராமச்சந்திரன், நளினி, அர்ச்சனா, சிநேகாஸ்ரீ, செவிலியர் பிரேமா ஆண்டனி, எக்கோ டெக்னீஷியன் நளினி, டாக்டர் ரமாதேவி, செவிலியர் விஜயலட்சுமி, டாக்டர் ஷில்பா, ஆகிய 9 பேர் ஆஜரானார்கள். அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் சுமார் 4 மணி நேரம் குறுக்கு விசாரணை செய்தார்.  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

9 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்தோம். ஆணையம் தரப்பில் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டது. டாக்டர் அர்ச்சனாவுக்கு இன்று (நேற்று) அந்த ஆடியோ போட்டு காட்டப்பட்டது. அப்போது, ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது தான் என்று அர்ச்சனா தெரிவித்தார். 27.9.2016ல் ஜெயலலிதாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது, ஜெயலலிதாவின் விருப்பத்தின் பேரில் டாக்டர் சிவக்குமார் பதிவு செய்த ஆடியோவை அர்ச்சனா உறுதி செய்தார்.

டாக்டர் சினேகா ஸ்ரீ 22.9.2016ல் போயஸ்கார்டனுக்கு சென்றோம். அங்கு முதல் மாடியில் ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார். ஆனால், சுயநினைவோடு இருந்தார். நான் அவருக்கு ஊசி போடும் போது வலி தாங்காமல் முனங்கி கொண்டே கையை தட்டி விட்டார். அவருக்கு பிபி, கண்பார்வை, சர்க்கரை, ஆக்ஸிஜன் அளவு குறித்து சோதனை செய்தேன். பின்னர், ஆக்சிஜன் கருவியை பொருத்தினேன். அதன்பிறகு சராசரி மனிதனுக்கு இருக்கும் 98 சதவீதம் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்தது. ஜெயலலிதா மருத்துவமனை வரும் வரை முணுமுணுத்து கொண்டே இருந்தார். அப்போது வி.கே.சசிகலா பேசினார்களா என்று டாக்டரிடம் கேட்டேன். அப்போது, அவர் சசிகலா ஜெயலலிதாவிடம் பேச்சு கொடுத்து கொண்டே வந்தார் என்று கூறினார்.

டாக்டர் ரமாதேவி 4.12.2016 அன்று ஜெயலலிதாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அப்போது அறையே வெளியே நின்று கொண்டிருந்த டாக்டர் ரமேஷ் வெங்கட்ராமன் அறைக்குள் வந்தார்.  ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழிந்து விட்டது. பின்னர் எக்கோ டீம் வந்தது. அதன்பிறகு எக்கோ எடுத்தனர். பல சிறப்பு மருத்துவர்கள் வந்தனர் என்றார். 22.9.2016 முதல் 4.12.2016ல் என்னவெல்லாம் நடந்ததோ அவற்றையெல்லாம் சசிகலா தனது பிரமாண வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அவர் கூறியதை தான் சாட்சியங்கள் உண்மை என்பதை நிரூபித்துள்ளனர். ஜெயலலிதா தொடர்பாக எங்களிடம் உள்ள வீடியோக்களை வெளியிடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் ஓபிஎஸ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை ஆணையம் விசாரணைக்கு ஆஜராக அழைக்கும். இல்லையெனில் நாங்கள் விசாரிப்போம். சட்டப்படி எங்களுக்கு உரிமை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், இது குறித்து விசாரணை ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: அப்போலோ டாக்டர்கள், செவிலியர்கள் அளித்த வாக்குமூலத்திலும், அப்போலோ அளித்த மருத்துவ குறிப்பிலும் முரண்பாடு இருந்தது. ஆனால், இப்போது சாட்சிகள் மருத்துவ குறிப்பில் இருப்பது உண்மை தான் என்று தெரிவித்தனர். குறிப்பாக, எக்கோ டெக்னீசியன் நளினி கடந்த 2016 டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு இதய செயலழிந்ததால் எக்கோ எடுக்க சொன்னார்கள். அப்போது, மாலை 3.50 மணி இருக்கும். அப்போது, ஜெயலலிதா மார்பை பிளந்து சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர் என்று கூறினார். ஆனால், மாலை 4.20 மணிக்கு தான் கார்டியாக் அரெஸ்ட் வந்ததாக மருத்துவ குறிப்பில் உள்ளது. இது தவறு தானே என்று ஆணையம் கேட்டது. ஆமாம் என்று கூறினார். ஆனால், இன்று மருத்துவ குறிப்பில் இருப்பது தான் உண்மை என்று கூறினார். டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதா சாப்பிடும் நிலையில் இல்லை என்று ரமா தேவி கூறினார். ஆனால், மருத்துவ குறிப்பில் காபி சாப்பிட்டதாகவும், சாப்பாடு சாப்பிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நேற்று நடந்த விசாரணையில் மருத்துவ குறிப்பில் உள்ளது தான் உண்மை என்று தெரிவித்தனர். சினேகா ஸ்ரீ போயஸ்கார்டனில் ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார். அவர்,  மருத்துவமனைக்கு வரும் வரை மயக்க நிலையில் தான் இருந்தார் என்று கூறினார். ஆனால், இன்று டாக்டர் சினேகா ஸ்ரீ ஜெயலலிதா போயஸ்கார்டனில் அரை மயக்கத்தில் இருந்தார். ஜெயலலிதா கையை தட்டி விட்டார் என்று கூறியுள்ளார். இதன் மூலம் யாரையோ காப்பாற்ற குறுக்கு விசாரணையில் திடீரென பல்டி அடித்துள்ளனர்.  பலரது வாக்குமூலம் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையுடன் ஒத்து போகாமல் இருப்பதால் ஜெயலலிதா இறந்த பின்னர் முன்தேதியிட்டு அனைத்து மருத்துவ அறிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் வழக்கறிஞர் குறுக்கு விசாரணையின் போது தெரிவித்தனர். இவ்வாறு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: