பயிர் கருகியதால் விவசாயிகள் தற்கொலைக்கு தமிழக அரசே பொறுப்பு : ராமதாஸ் கண்டனம்

சென்னை: இரு விவசாயிகள் தற்கொலைக்கு தமிழக அரசே பொறுப்பு என்று ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகை மாவட்டம் கீழையூரை அடுத்த தலையாமழை கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்ற உழவர் அப்பகுதியில் 6 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் சாகுபடி செய்திருந்தார். ஆனால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் அவரது வயலில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகின.   இதனால் வேதனையடைந்த ராமமூர்த்தி, வாங்கிய கடனை அடைக்க முடியாதே என்ற அதிர்ச்சியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதேபோல், நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஆதமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற விவசாயியும் பயிர்கள் கருகியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். வறட்சி காரணமாக பயிர்கள் கருகியதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், ஒரே மாவட்டத்தில் ஒரு சில நாட்கள் இடைவெளியில், இரு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை சாதாரண நிகழ்வாகக் கருதி கடந்து செல்ல முடியாது. கடைமடை பாசனப் பகுதிகளுக்கு காவிரி நீரை கொண்டு செல்லாத பினாமி அரசு தான் உழவர்களை தற்கொலைக்கு தூண்டியிருக்கிறது. அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் நடப்பாண்டில் மேட்டூர் அணை மொத்தம் நான்கு முறை நிரம்பியது. அதிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் 170 டி.எம்.சி. நீர் யாருக்கும் பயன்படாமல் வீணாக வங்கக் கடலில் கலந்தது. ஆனாலும், மேட்டூர் அணை திறக்கப்பட்டு இன்றுடன் 68 நாட்களான நிலையில் இதுவரை கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை.  கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாததற்கு தமிழக அரசு தான் காரணம்.    அதனால், நாகை மாவட்டத்தில் இரு விவசாயிகளின் தற்கொலைக்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட இரு விவசாயிகளின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.   இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: