பராமரிப்பு பணி, பனி மூட்டம் காரணமாக சென்னை மார்க்கமாக செல்லும் ரயில்கள் 2 மணி நேரம் தாமதம்

வேலூர்: பராமரிப்பு பணிகள் நடப்பதாலும், அதிகாலையில் ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாகவும் காட்பாடி ரயில் நிலையம் வழியாக சென்னை மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் நேற்று சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்றது. இதனால் பயணிகள் பரிதவிப்புக்குள்ளாகினர்.வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் வழியாக தினமும் 150க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் பணிபுரிபவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் ரயிலில் சென்று வருகின்றனர். இதேபோல் ஜோலார்பேட்டை, அரக்கோணம் ரயில் நிலையங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னைக்கு தினமும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் காட்பாடி ரயில் நிலையம் வழியாக சென்னை மார்க்கமாக செல்லும் திருவனந்தபுரம் அதிவேக ரயில், காவேரி எக்ஸ்பிரஸ், ஆலப்புழா எக்ஸ்பிரஸ், மங்களூர் மெயில், ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ், சேரன் அதிவேக ரயில் உட்பட பல்வேறு ரயில்கள் சுமார் 40 நிமிடம் முதல் 2 மணிநேரம் வரை காலதாமதமாக இயக்கப்பட்டது.  தினமும் சென்னைக்கு சென்று வருபவர்கள் மட்டுமின்றி சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று வேலைக்கு செல்வதற்காக அதிகாலை குடும்பத்துடன் சென்னைக்கு புறப்பட்டவர்களும் ரயில் நிலையத்தில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் ரயில்கள் காலதாமதத்தால் கைக்குழந்தைகளுடன் நீண்ட நேரம் காத்திருந்து பலர் அவதிக்குள்ளாகினர். காலதாமதமாக வந்த ரயில்களில் பொதுமக்கள் முண்டியடித்து ஏறினர். அவசரமாக செல்ல வேண்டியவர்கள், பஸ்களில் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். ஆனாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. கல்லூரி மாணவர்களும் அவதிக்குள்ளாகினர். ரயில்கள் காலதாமதத்தால் ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையங்களில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கேரளாவில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் இன்று (நேற்று) அதிகாலை அதிகளவு பனிமூட்டம் காணப்பட்டது. இதுபோன்ற காரணங்களால், சிக்னல் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. எனவே, சென்னை மார்க்கமாக செல்லும் ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டது’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: