மனித உரிமை ஆணையம் முன் சோபியா வாக்குமூலம் பாஜவை எதிர்த்து கோஷமிட்டதால் டார்ச்சர்: வெளிநாடு செல்ல இடையூறு செய்யக்கூடாது என நீதிபதி உத்தரவு

நெல்லை: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் பா.ஜ.வை எதிர்த்து கோஷமிட்ட விவகாரத்தில், நெல்லையில் மனித உரிமை ஆணையம்  முன்பு ஆராய்ச்சி மாணவி சோபியா, அவரது தந்தை ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

சென்னையில் இருந்து விமானத்தில் தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை, கடந்த 3ம் தேதி தூத்துக்குடி வந்தபோது, அதேவிமானத்தில் வந்த தூத்துக்குடி கந்தன்  காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் சாமியின் மகள் லூயிஸ் சோபியா (23) பாசிச பா.ஜ. ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டார். அவர், கனடாவில் உள்ள மாண்ட்ரியல்  பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படிப்பு பயின்று வருகிறார். விடுமுறைக்காக கனடாவில் இருந்து சென்னை வந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தபோது இந்த  சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக விமான நிலையத்தில் தமிழிசைக்கும், மாணவி சோபியாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து  தமிழிசையின் புகார் அடிப்படையில், புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து சோபியாவை கைது செய்து தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.  மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி, அவரை நிபந்தனையின்றி ஜாமீனில் விடுதலை செய்தார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோபியா மீது வழக்கு பதிவு செய்யபட்டதற்கு தேசிய அளவில் தலைவர்கள் கடும் கண்டனம்  தெரிவித்தனர். இந்நிலையில் போலீசாரால் சோபியா மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறி தந்தை சாமி மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல்  செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன், புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் திருமலை, சோபியாவின் தந்தை சாமி  ஆகியோர் 24ம் தேதி (நேற்று) காலை 11 மணிக்கு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் மனித உரிமை கமிஷன் முன் ஆஜராக உத்தரவு  பிறப்பித்தார். அதன்படி சோபியாவும், அவரது தந்தை சாமியும் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இவர்கள் தரப்பில் வக்கீல்களும் ஆஜராகி மனித  உரிமை மீறலுக்கான ஆதாரங்களை சமர்ப்பித்து வாக்குமூலம் அளித்தனர். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் திருமலையும் ஆஜராகி விளக்கம்  அளித்தார். இதையடுத்து மாணவி சோபியாவின் மேற்படிப்புக்கு  போலீசார் இடையூறு செய்யக் கூடாது என்று நீதிபதி  ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்தார்.

பின்னர் சோபியாவின் வக்கீல் அதிசயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: மாணவி  சோபியாவை கைது செய்த போலீசார் விமான நிலையத்திலும், காவல்  நிலையத்திலும் வைத்து மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல். இதுகுறித்து  நீதிபதியிடம் எழுத்து பூர்வமாக அறிக்கை  தாக்கல் செய்துள்ளோம். விசாரணையை வருகிற அக்டோபர் 26ம் தேதிக்கு நீதிபதி  ஒத்தி வைத்துள்ளார். அறிக்கையில், பா.ஜ. தலைவர்  தமிழிசை மீது கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.  தூத்துக்குடி கோர்ட்டில் நடந்த மனித உரிமை  மீறல் குறித்தும் தெரிவித்துள்ளோம். இதுதொடர்பாக ஐகோர்ட் பதிவாளரிடம் நாங்கள் புகார் செய்வோம். மனித உரிமை மீறல் தொடர்பாக காவல்துறையினர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சோபியா மீது வழக்குப்பதிவு செய்த எஸ்ஐயிடம் விசாரணை நடத்த வேண்டும். சோபியா  வெளிநாடு சென்று படிப்பதற்கு  காவல்துறை இடையூறு செய்யக் கூடாது என்று  நீதிபதி தெரிவித்த உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் திருமலை  எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளார்.  இவ்வாறு அதிசயகுமார் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: