ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்து சென்னையில் மத்திய குழு கருத்து கேட்டது: எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் குவிந்ததால் பரபரப்பு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து மத்திய குழு சென்னையில் நேற்று மக்களிடம் கருத்து கேட்டது. ஆலை ஆதரவாளர்களும்  எதிர்ப்பாளர்களும் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.  தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100வது நாள் நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசு  ஸ்டெர்லைட் ஆலையை அதிரடியாக மூடியது.  இதனைதொடர்ந்து வேதாந்தா நிறுவனம், டெல்லியில் உள்ள மத்திய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட்  ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விஞ்ஞானி சதீஷ், சி.கர்கோட்டி,  மத்திய மாசு கட்டுபாடு வாரிய விஞ்ஞானி வரலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவை நியமித்து, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி  3 பேர் கொண்ட குழு கடந்த 22ம் தேதி முதல் ஸ்டெர்லைட் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களிடம் விசாரணை நடத்தி மனுக்களை பெற்றனர். இதனைதொடர்ந்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பசுமைதீர்ப்பாயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தின் வழக்கறிஞர் குழு மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜுனன், பேராசிரியை பாத்திமா ஆகியோரும். ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக விவசாயிகள்,  ஸ்டெர்லைட் ஊழியர்கள், காண்ட்ராக்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, மத்திய குழுவிடம் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வக்கீல் பி.எஸ்.ராமன் வாதிடுகையில், ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதி மக்களுக்கு எந்த பாதிப்பும்  இல்லை, அங்கு கொட்டப்படும் காப்பர் கழிவுகள், ஜிப்பசம் கழிவுகள், நச்சுத்தன்மை வாய்ந்ததில்லை. அவற்றை எந்த நிலத்திலும் கொட்டலாம்.ஸ்டெர்லைட்  ஆலையால் வருமானம் ஈட்டி வந்த மக்கள் தற்போது மிகவும் பின் தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது பலர் மீண்டும் ஸ்டெர்லைட்டை திறக்க கோரிக்கை வைக்கின்றனர் என பல்வேறு வாதங்களை வைத்தார். இதேபோல் ஆஜராகியிருந்த ஸ்டெர்லைட்  ஆலையின் மருத்துவர், கூறுகையில், அங்கு வேலை செய்யும் மக்களுக்கும், அருகே உள்ள மக்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வீண் வதந்திகள் என்று  வாதிட்டார். அப்போது ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக அங்கு வேலை பார்த்தவர்கள் மற்றும் காண்டிராக்டர்கள் உள்ளிட்ட 45 ஆயிரம் மக்களின் ஒப்புதல்கள்  பெற்ற மனுவை ஆதார் கார்டுடன் இணைத்து மத்திய குழுவிடம் அளித்தனர். மேலும் தாங்கள் ஆலை மூடப்பட்டதால் கடும் வறுமையில் வாடுவதாகவும், பெரும்  நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர். இதனையடுத்து நீதிபதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வாதிட வந்த அனைவருக்கும் அக்டோபர் 5ம் தேதி வாதிட வாய்ப்பு  தருவதாக கூறி கருத்து கேட்பு கூட்டத்தை தள்ளிவைத்தார்.பின்னர் வைகோ கூறியதாவது: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், அமைக்கப்பட்ட குழு கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றது. இன்று  என்னுடைய கருத்தை தெரிவிப்பதற்காக வந்திருந்தேன். ஆனால் அங்கு ஸ்டெர்லைட் ஆதராவாக வழக்கறிஞர் சுமார் ஒன்றை மணிநேரம் வாதிட்டார். அவர்  போராடிய மக்களை எல்லாம் குறை சொல்லுகிறார். அதனை என்னால் இங்கு விவரிக்க முடியவில்லை. மேலும் வேதாந்த நிறுவனம் மக்களை பணம் கொடுத்து  விலைக்கு வாங்கி இங்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. எனது கருத்தை அக்டோபர் 5ம் தேதி கேட்பதாக நீதிபதி கூறியுள்ளார். இவ்வாறு கூறினார்.கருத்து ேகட்பு கூட்டம் நடப்பதை கேள்விப்பட்ட ஸ்டெலைட் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் அந்த வளாகத்தில் குவிந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: