ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணை

சென்னை:    துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக திமுக  கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அதனை எதிர்க்கும் விதமாக  தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய கோரி  சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி வழக்கு  தொடர்ந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை சட்டரீதியாக மேற்கொண்டு சந்திப்போம் என திமுக தரப்பில் கூறப்பட்டது.இந்நிலையில், சபாநாயகர் உத்தரவிற்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி கடந்த மே 9ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்தார்.

இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட செம்மலை, மாபா.பாண்டியராஜன், நட்ராஜ், மனோரஞ்சிதம், சின்னராஜா மற்றும் மனோகரன் ஆகியோர் மீது கட்சி  தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி.தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களான வெற்றிவேல் மற்றும் தங்க  தமிழ்ச்செல்வன் ஆகியோரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து இரு மனுக்களையும் ஒன்றாக இணைத்து விசாரித்த உச்ச நீதிமன்றம், “வழக்கில் சபாநாயகர் தனபால், செயலாளர் மற்றும் ஓபிஎஸ் உட்பட 11  எம்எல்ஏக்கள் ஆகிய அனைவரும் 4 வாரத்தில் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும்’’ என நோட்டீஸ் அனுப்பி கடந்த ஜூலை 9ம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏகே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அமர்வில் 14வது வழக்காக இன்று விசாரணைக்கு  வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: