சர்ச்சை பேச்சின் பின்னணியில் இருந்து கொண்டு கருணாஸை இயக்குவது யார் என்பதை அறிய 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு

சென்னை: கருணாசின் சர்சை பேச்சுகளின் பின்னணி என்ன என்பது குறித்து  முழுமையாக விசாரிக்க 7 நாள் போலீஸ் காவல் கேட்டு எழும்பூர்  நீதிமன்றத்தில்  போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.முக்குலத்தோர் புலிப்படை  சார்பில் கடந்த 16ம் தேதி நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்  நடந்தது. அதில் நடிகர் கருணாஸ் கலந்து கொண்டு,  தமிழக முதல்வர் ஆட்சியில்  இருப்பது என்னால் தான், அவர் எனக்கு பயப்படுகிறார் என்று மிரட்டும்  தொனியில் பேசியிருந்தார். மேலும் காவல்துறை  அதிகாரிகளுக்கும் சாவல்  விட்டு பேசியிருந்தார். இந்த சர்ச்சையான பேச்சுகள் மக்களிடையே பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து  கருணாஸை கைது செய்யவும் பலர் கோரிக்கை  வைத்தனர். இதனால் நுங்கம்பாக்கம் போலீசார், கருணாஸ் பேசிய வீடியோ பதிவை  வைத்து அவர் மீது 8 பிரிவுகளின்  கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கைது  செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் நுங்கம்பாக்கம் போலீசார்  நேற்றுமுன்தினம் கருணாஸ்  வீடு அமைந்துள்ள சாலிகிராமத்திற்கு சென்று அவரை  அதிரடியாக கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

இதனைதொடர்ந்து,  நுங்கம்பாக்கம் போலீசார், கருணாஸ் முதல்வரை மிரட்டியது, மற்றும் ஐபிஎஸ்  அதிகாரி அரவிந்தனை மிரட்டியது எதற்காக,  இப்படியெல்லாம் பேச அவரை பின்  நின்று இயக்குவது யார். மேலும் தினமும் குடிக்க மட்டுமே 1 லட்சம் செலவு  செய்வதாக கூறியுள்ளார். அவருக்கு அவ்வளவு  பணம் எப்படி வருகிறது  என்பதையெல்லாம் குறித்து விசாரணை நடத்த 7 நாள் போலீஸ் காவல் கேட்டு,  எழும்பூர் 14வது மாஜிஸ்திரேட் ரோசிலின் துரை முன்பு மனு  ஒன்றை தாக்கல்  செய்தனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.இதேபோல், கருணாஸ்  ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தான் எந்த குற்றமும்  செய்யவில்லை, பொதுக்கூட்டத்தில் பேசியதை வைத்து  வழக்கு போட்டுள்ளனர்.  போலீசார் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் என்னை கைது செய்துள்ளனர். எனவே என்னை  ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்.  போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு  தருவேன். இவ்வாறு ஜாமீன் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவும் நாளை  விசாரணைக்கு வர உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: