வடமாநிலங்களில் கனமழை : பஞ்சாபில் ராணுவம் தயார் நிலை

சண்டிகர்: பஞ்சாபில் மூன்றாவது நாளாக நேற்றும் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது.அங்கு ராணுவம் தயார் நிலையில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இடைவிடாது தொடரும் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக நேற்றும் கனமழை நீடித்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர் மழை எதிரொலியாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கள் குறித்து அனைத்து அதிகாரிகளுடன் முதல்வர் அம்ரீந்தர் சிங் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். தொடர் மழையால் வெள்ளப்பாதிப்பு அபாயம் உள்ளதால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார். இதுதவிர உடனடி மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக ராணுவமும் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ளக்காடான உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை கொட்டி வருகிறது. ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் சம்போலி மாவட்டத்தின் லம்பாகாட் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இதேபோல் ரிஷிகேஷ்-கேதர்நாத் நெடுஞ்சாலையிலும் டோலியா தேவி கோயில் அருகே நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.உத்தரகாசி மாவட்டத்தில் ரிஷிகேஷ்-யமுனோத்ரி நெடுஞ்சாலையும் முடங்கியுள்ளது. இந்த 3 முக்கிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி 45 கிராமப்புற சாலைகளிலும் போக்குவரத்து தடைபட்டுள்ளது.  காஷ்மீர் மழை: இதேபோல், காஷ்மீரிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய 29 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நாக்ரி, சப்பே சாக் மற்றும் ஜாக்ஹோல், பில்லாவார் உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 6 பெண்கள், 10 குழந்தைகள் உட்பட 29 பேரை காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர்.அச்சத்தில் கேரளா: கேரளாவில் ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  திருவனந்தபுரம் முதல் எர்ணாகுளம் வரை உள்ள மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 செமீ முதல் 11 செ.மீ மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே வடமாநிலங்களில் மழை பாதிப்பு சம்பவங்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: