ஊரப்பாக்கம் அருகே பரபரப்பு மணல் லாரி மோதி கல்லூரி மாணவி பரிதாப பலி

*பொதுமக்கள் போராட்டம்

*போலீஸ் குவிப்பால் பதற்றம்

சென்னை: ஊரப்பாக்கம் அருகே நேற்று காலை மணல் லாரி மோதியதில் கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் 10 லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கம் அடுத்த ஆதனூர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவரது மனைவி கண்மணி. ஊரப்பாக்கத்தில் ஒரு தனியார் பள்ளியில் கண்மணி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சரண்யா (எ) சூலமெட்டி சேரன் கிருபா (19) என்ற ஒரு மகள் உள்ளார். இவர் கிண்டியில் உள்ள கல்லூரியில் பிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் ஆதனூரில் இருந்து ஊரப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு சைக்கிளில் வந்து, அங்கிருந்து ரயில் மூலம் கல்லூரிக்கு செல்வார். நேற்று காலை 7.30 மணியளவில் வழக்கம்போல், ஆதனூரில் இருந்து சரண்யா சைக்கிளில் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மண்ணிவாக்கம், அண்ணாநகர் அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த டாரஸ் லாரி சரண்யா சைக்கிள் மீது வேகமாக மோதியது.

இதில் சரண்யா சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டு, லாரி சக்கரத்துக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இதை பார்த்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், டாரஸ் லாரியின் கண்ணாடியை அடித்து நொறுக்கி, லாரி டிரைவர் தாம்பரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பவரை  சரமாரியாகத் தாக்கி, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், விபத்தை ஏற்படுத்திய லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். விபத்து செய்தி காட்டு தீயாக பரவியதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அவ்வழியாக வந்த 10க்கும் மேற்பட்ட லாரிகளின் கண்ணாடிகளை அடித்து உடைத்து றுக்கினர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘ஊரப்பாக்கத்தில் இருந்து மண்ணிவாக்கத்துக்கு செல்லும் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி மந்தகதியில் நடைபெறுகிறது. இதில், கால்வாயில் இருது அகற்றப்படும் சவுடு மண், பல்வேறு தனியார் மணல் வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த மணலை ஏற்றி வரும் டிரைவர்கள் எந்நேரமும் குடிபோதையில் அதிவேகத்தில் லாரிகளை ஓட்டி வருகின்றனர். இதனால் சாலையோரமாக பள்ளி மாணவர்கள் உட்பட அப்பகுதி மக்கள் நடமாட முடியாமல் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும், இவ்வழியாக செல்லும் டாரஸ் லாரிகள் அதிக மணலை ஏற்றிக்கொண்டு, வேகமாக செல்வதால், அந்த மணல் காற்றில் பரவி, சாலை முழுவதும் மணல் மேடாக தேங்கியுள்ளது.

தற்போது ஒரு கல்லூரி மாணவி பரிதாபமாக பலியாகியிருக்கிறார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும், வேகமாக செல்லும் மணல் லாரிகளை தடுக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இப்பிரச்னை குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர் மற்றும் மணல் கடத்தலை தடுக்க வேண்டும். இல்லையெனில், மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்து விரைவில் மறியல் போராட்டங்களில் ஈடுபடுவோம்’ என ஆவேசத்துடன் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: