சென்னையில் 30ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மு.க.ஸ்டாலின், கனிமொழி,டிடிவி.தினகரன் பங்கேற்க அழைப்பு: டெல்லி தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை

சென்னை: சென்னையில் வருகிற 30ம் தேதி நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி மற்றும் டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினராக பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சார்பில் கோலாகலமாக கொண்டாட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஆண்டு மே மாதம் 2ம்தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மதுரையில் கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 31 மாவட்டங்களில் நடந்துள்ளது.மதுரையில் தொடங்கிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தலைநகர் சென்னையில் வருகிற 30ம் தேதி நிறைவு பெற உள்ளது. விழா நடைபெறும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுடன் இணைந்து தமிழ்நாடு 50ம் ஆண்டு பொன்விழாவும் நடைபெற உள்ளது.முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் வாழ்த்துரை பட்டியலில் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பெயர் மற்றும் திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக எம்எல்ஏக்கள் ஜெ.அன்பழகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், கே.எஸ்.ரவிச்சந்திரன், கு.க.செல்வம், தாயகம் கவி, ரங்கநாதன், வாகை சந்திரசேகர், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும் ஆர்.கே.நகர் எம்எல்ஏவுமான டி.டி.வி.தினகரன் ஆகியோர் பெயர் அழைப்பிதழில் போடப்பட்டுள்ளதுடன், வாழ்த்துரை வழங்குவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான அழைப்பிதழ் வழங்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அனைத்து மாநில அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அதிமுக தவிர அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள், விஐபிக்கள் மற்றும் 234 எம்எல்ஏக்களுக்கும் விழா அழைப்பிதழ் வழங்கப்படுகிறது. இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘வருகிற 30ம் தேதி சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த விழாக்கு சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், பிரதமர் மற்றும் டெல்லி முக்கிய பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. சென்னையில் விழா நடைபெறுவதால் சென்னை மாவட்ட அனைத்து எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பெயர் அழைப்பிதழில் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலும், எம்எல்ஏ என்ற முறையிலும் டி.டி.வி.தினகரனுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இது கட்சி விழாவாக இல்லாமல் அரசு விழாவாக கொண்டாடுவதால் அனைத்துக்கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: