வீடு, வாகன கடன்கள் கிடுகிடு : லோனில் வாழ்க்கை ஓட்டுவதில் தமிழகம், மகாராஷ்டிரா ‘டாப்’

புதுடெல்லி: தனிநபர்கள் வாங்கும் கடன்களில் 40 சதவீதம் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் வாங்கப்படுவதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்வது மட்டுமின்றி அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய பெரும்பாலான மக்கள் கடனுதவியையே நாடுகின்றனர். குறிப்பாக, வாகன வசதி, வீடு, வீட்டு உபயோக பொருட்கள் போன்றவை கடனுதவி மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.தனிநபரின் வேலை, வருவாய், இதற்கு முன்பு கடன் பெற்றிருந்தால் அவர் முறையாக திருப்பி செலுத்தியுள்ளாரா என பல்வேறு விவரங்களை ஆராய்ந்த பிறகே கடன் வழங்கப்படுகிறது. கடன் வழங்குவதை வங்கிகள் நிதி நிறுவனங்கள் முடிவு செய்வதில் சிபில் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், சிபில் நிறுவனம் கடன் வழங்கல் தொடர்பான புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. இதில் கூறியிருப்பதாவது: பொருளாதார வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் காரணமாக கடன் தேவைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரத்தின்படி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மட்டும் நாட்டின் ஒட்டு மொத்த தனிநபர் கடன்களில் 40 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்திய மக்கள் தொகையில் 20 சதவீதம் மட்டுமே இந்த மாநிலங்களில் உள்ளன.கடந்த ஜூன் நிலவரப்படி மகாராஷ்டிராவில் மட்டும் அதிகபட்சமாக ₹5,50,200 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக தமிழகத்தில் ₹2,77,400 கோடி, கர்நாடகாவில் ₹2,74,900 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் 10 பெரிய மாநிலங்களின் மொத்த தனிநபர் கடன் ₹21,27,400 கோடி. 2017 மற்றும் 2018 2ம் காலாண்டில் கடன்கள் 27 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுபோல் அனைத்து தனிநபர் கடன் வகையிலும் சேர்த்து தனிநபர் கடன் 43 சதவீதமும், கிரெடிட்கார்டு கடன் 42 சதவீதமும் அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது என சிபில் தெரிவித்துள்ளது.

வீடு, வாகன கடன்கள் மட்டுமின்றி டிவி, பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்கு கூட மக்கள் கடன் உதவியை நாடுகின்றனர். இதன்மூலம்தான் காலத்துக்கு ஏற்ற வாழ்க்கைத் தரத்தை பலர் மேம்படுத்திக் கொள்கின்றனர். இதனால் கடன் வாங்குவது அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதோடு கிரெடிட் கார்டுகள் உரசுவதற்கும் மக்கள் அஞ்சுவதில்லை என்பதையும் மேற்கண்ட புள்ளி விவரம் மெய்ப்பிக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: