தமிழக-கேரள-கர்நாடக எல்லைப் பகுதியில் கொரில்லா ஆயுத போராட்டம்: ஆந்திர எம்எல்ஏ சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மாவோயிஸ்ட்களின் புதிய மிரட்டலால் பரபரப்பு

சென்னை: தமிழகம், கேரளா, கர்நாடகா எல்லையில் ஆயுதப்போராட்டம் நடத்தி, கொரில்லா மண்டலங்களாக உருவாக்குவோம் என்று மாவோயிஸ்ட்டுகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆந்திராவில் எம்எல்ஏ சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மாவோயிஸ்ட்டுகளின் இந்த புதிய மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட விவிடிபுட் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தெலுங்கு தேச எம்எல்ஏ சர்வேஸ்வரராவ், முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா ஆகியோரை துப்பாக்கியால் மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொன்றனர். இதை கண்டித்து,  தும்மிரிகூடா போலீஸ் நிலையத்தை எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் தீ வைத்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 3 பேரின் புகைப்படங்களை ஆந்திரா போலீசார் நேற்று வெளியிட்டுள்ளனர். அவர்களைப் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இந்தநிலையில், தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை ஒன்றிணைத்து ஆயுதப் போராட்டம் நடத்தப்போவதாக மாவோயிஸ்ட்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உருவாக்கப்பட்ட செப்டம்பர் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஒரு வார காலம் கட்சி உருவாக்க நாளாக கொண்டாடப்படுகிறது.

மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி., ஸ்மார்ட் சிட்டி என்று பல பெயர்களில் தினந்தோறும் பெரு முதலாளிகளுக்கான புதிய இந்தியா பிறந்து கொண்டே இருக்கிறது. தீவிரமாகி வரும் சுரண்டல், வறுமை, விலைவாசி உயர்வு, வேலை பறிப்பு, இடம்பெயர்வு, சுற்றுச்சூழல் பாதிப்புகள், உயிர் குடிக்கும் நோய்கள் ஆகியவை தலைவிரித்தாடுகின்றன. இந்த ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள், விவசாயத்தை அழிப்பதற்கான திட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்தம், மாட்டுக்கறி தடைச் சட்டம், பசு பாதுகாப்பு என்ற பெயரில் தலித் மக்கள், முஸ்லிம் மக்கள் மீது நடைபெற்று வரும் படுகொலைகள், கனிம வளக் கொள்ளைக்காக பழங்குடி மக்கள் சொந்த நிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு வருவது தொடர்கிறது. மேலும், மக்களுக்காக போராடுபவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி, ஒடுக்கி வருகிறது. நாளுக்கு நாள் தனது சர்வாதிகாரம் வெளுத்து வருவதை உணர்ந்து, மக்கள் போராட்டங்களில் இருந்து திசை திருப்பவும் இன்னும் தீவிரமான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடவுமே தன்னை கொல்ல மாவோயிஸ்ட்கள் சதி என்ற  பெயரில் மக்களுக்காக போராடும் புரட்சிகர செயல்பாட்டாளர்களை கருப்புச் சட்டங்களால் கைது செய்துள்ளது. இந்த போராட்டங்கள் ஆட்சி மாற்றத்திற்கானது மட்டுமல்ல, அது சமூக மாற்றத்திற்கானது. எனவே, நாடாளுமன்ற தேர்தல் பாதையல்ல, ஆயுதந்தாங்கிய புரட்சிப் பாதை தான் மக்களின் அடிமைத் தளைகளை உடைத்தெறியும். கோடானு கோடி பாட்டாளிகளுடைய முறுக்கேறிய கரங்கள்  உயர்த்தப்படும். ராணுவத்தின் துப்பாக்கிகளால் காவல் புரியப்பட்டு வரும் எதேச்சதிகாரத்தின் நுகத்தடி உடைந்து சுக்கு நூறாகும். மத்திய மற்றும் கிழக்கு  இந்தியாவில் கனிம வளங்களை சூறையாட முயற்சித்து வரும் ஏகாதிபத்திய தரகு முதலாளிகளின் நூற்றுக்கணக்கான திட்டங்கள் நமது மாவோயிஸ்ட்  கட்சியின் தலைமையில் மக்களின் புரட்சிகர போராட்டங்களால் முறியடிக்கப்பட்டு இன்று வரை ஒரு கைப்பிடி மண்ணைக் கூட அள்ள முடியாத சூழல்  உருவாகியுள்ளது.

 இதேபோல், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா எல்லைப் பகுதிகளிலும் மக்களை அணிதிரட்டி அப்பகுதிகளை கொரில்லா மண்டலங்களாக மாற்றும்  முயற்சியில் நமது மக்கள் விடுதலை கொரில்லா படை வீரர்கள் எக்கு உறுதியுடன் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றனர். எளியவர்கள் வயிற்றில் எரியும் தீ, ஏகாதிபத்தியத்தையும் சுரண்டும் ஆளும் வர்க்கத்தையும் எரிக்கும் என்ற உண்மையை உணர்த்தும் போராட்டமாக  தமிழகத்தின் போராட்டத்தை முன்னெடுப்போம். அரசின் பாசிச ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தையும் மக்கள் அதிகாரத்திற்கும் மக்கள் விடுதலைக்குமான போராட்டங்களாக  மாற்றுவோம். முச்சந்திப்பில் நடைபெற்று வரும் ஆயுதப் போராட்டத்தை கூர்மைப்படுத்தி கொரில்லா மண்டலங்களாக மாற்றுவோம். மக்கள் யுத்தப் பாதையில்  அணிதிரளுமாறு மக்களை கூவி அழைக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  தமிழகத்தின் எல்லை மாநிலமான ஆந்திராவில்தான் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தி வந்தனர். தற்போது தமிழகம், கேரளா, கர்நாடக  மாநிலங்களுக்கும் மாவோயிஸ்ட்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: