பல்லாவரம் ரேடியல் சாலையில் பாதுகாப்பில்லாத சாலை விரிவாக்க பணி : விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்

பல்லாவரம், செப். 24: பல்லாவரம் ரேடியல் சாலையில் தடுப்புகள் இல்லாமல் சாலை விரிவாக்கப் பணிகள் நடப்பதால் விபத்து பீதியில் வாகன ஓட்டிகள் பயணம் செய்கின்றனர். பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் வரை செல்லும் ரேடியல் சாலையின் இருபுறமும் மென்பொருள் நிறுவனம், பள்ளிகள், மருத்துவமனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன, இதனால் பல்லாவரம் ரேடியல் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல்கள் மிகுந்து காணப்படும். ஏற்கனவே 200 அடி சாலையாக உள்ள இந்த சாலையில், நாள்தோறும் அதிக அளவில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தற்போது, அரசு இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்தது வருகிறது.  அவ்வாறு பல்லாவரம் மேம்பாலத்தில் இருந்து, பல்லாவரம் பெரிய ஏரி உட்பட ரேடியல் சாலைகளின் இருபுறமும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக சாலையோரங்களில் போடப்பட்டிருந்த தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு, தற்போது திறந்தநிலையில் உள்ளது. இதனால் இவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

குறிப்பாக, இரவு நேரங்களில் பல்லாவரம் பெரிய ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில், போதிய மின்விளக்குகள் இல்லாததால், எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கின் வெளிச்சத்தில் கண்கள் கூசி, வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழும் அபாயம் உள்ளது. இந்த சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ளும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், எச்சரிக்கை விளம்பரபதாகைகள் மற்றும் ஆபத்தை குறிக்கும் வகையில் இரவிலும் ஒளிரக்கூடிய ஸ்டிக்கர்களை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வரும் வேளையில், அங்கு சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ளும் அதிகாரிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து விபத்து, ஏற்படாதவாறு தங்களது பணியை மேற்கொள்ள வேண்டும். மாறாக, கடமைக்காக இந்தப் பணியை மேற்கொள்ளக்கூடாது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்களாகிய நாங்கள் தான். எனவே, இனியாவது பெருகி வரும் விபத்தினை கருத்தில் கொண்டு, சாலை விரிவாக்கப்பனியின் பொது சாலையின் இரண்டு பக்கமும் போதிய தடுப்புகளை அமைப்பதுடன் எச்சரிக்கை பலகைகள் மற்றும் தடுப்புகள் அமைத்து தங்களது பணியை தொடர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: