சென்னையில் பணிநிரந்தரம் கோரி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் போராட்டம்

சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, பணிநிரந்தரம் கோரி போராட்டம் நடத்தும் பகுதி நேர ஆசிரியர்களின் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் 15,000க்கு மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 7 ஆயிரத்து 700 வழங்கப்படுகிறுது. இந்நிலையில், சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த போராட்டத்தின் போது, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பகுதி நேர ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில், விரைவில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இதனையடுத்து வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆசிரியர்களின் இந்த போராட்டத்தை ஒட்டி, அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகவும், கூலி வேலைக்கு சென்றால் கூட அதிக சம்பளம் கிடைக்கும் எனவும் பகுதி நேர ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் பணிநிரந்தரம் கோரி பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: