சோபியாவின் படிப்பிற்கு எந்த தடையும் இருக்கக் கூடாது: காவல் துறைக்கு மனித உரிமை ஆணையம் வலியுறுத்தல்

சென்னை: பாஜகவை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட மாணவி சோபியாவின் படிப்பிற்கு எந்த தடையும் இருக்கக் கூடாது என்று காவல் துறைக்கு மனித உரிமை ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

யார் எந்த சோபியா ?

தூத்துக்குடியை சேர்ந்த மாணவி சோபியா. இவர் கனடாவில் ஆராய்ச்சி மாணவியாக படித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 3ம் தேதி நாடுதிரும்பிய சோபியா தனது பெற்றோருடன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றுகொண்டிருந்தார். அதே விமானத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பயணம் செய்துள்ளார். அப்போது சோபியா, பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்டுள்ளார். இதனையடுத்து விமானத்தில் இருந்து வெளியே வந்த தமிழிசை இது குறித்து விமான நிலைய போலீசாரிடம் கூறி மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை உடனடியாக கைது செய்தனர். பின்னர் தூத்துக்குடி நடுவர்நீதிமன்றம் சோபியாவை நிபந்தனையின்றி ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது.

மனித உரிமை ஆணையத்தில் மனு  தாக்கல்

இந்தநிலையில் சோபியாவின் தந்தை ஏ.ஏ.சாமி சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து கைது செய்யப்பட்டது முதல் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டது வரை எனது மகளுக்கு போலீசாரால கடும் மன உளைச்சல் ஏற்பட்டது. மேலும் உடல்ரீதியாகவும், மனது ரீதியாகவும் கடும் இன்னலுக்கு ஆளாகினார். இதில் போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர். எனவே புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் சோபியாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயசந்திரன், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளரும், சோபியாவின் அப்பா ஏ.ஏ.சாமியும் வரும் 24ம் தேதி காலை 10.30 மணிக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆய்வு மாளிகையில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.

மாணவி சோபியா ஆஜர்

இந்நிலையில் மாணவி சோபியா மற்றும் அவரது தந்தை சாமி,  புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் நெல்லை மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகினர்.அப்போது சோபியாவின் படிப்பிற்கு எந்த தடையும் இருக்கக் கூடாது எனக் காவல் துறையினருக்கு மனித உரிமை ஆணையம் வலியுறுத்தி உள்ளது.மேலும் சோபியாவின் தந்தை கொடுத்த புகாருக்கு ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து காவல்துறை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து எழுத்துப்பூர்வ  அறிக்கை  தாக்கல் செய்யவும் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார். மீண்டும் 26ம் தேதி ஆஜராக மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: