இறக்குமதி பொருட்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி : இறக்குமதி பொருட்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கம் தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களின் இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நவரத்தினக் கற்கள், உருக்கு மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களின் சில வகைகள் மீது அதிக இறக்குமதி வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில நாட்களாக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனை தடுக்கவே இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போரால் சீனப் பொருட்களுக்கு சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். பிற நாடுகளின் பொருட்களுக்கு தாங்கள் குறைந்த வரி விதிக்கும் நிலையில், அமெரிக்கப் பொருட்களுக்கு அந்த நாடுகளில் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் புகார் எழுப்பி வருகிறார். இதையடுத்து அமெரிக்கா-சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போரால் இந்தியாவிற்குள் சீன பொருட்கள் அதிகரிக்கின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் இறக்குமதி பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வரி கட்டாமல் கடத்தி வரப்படுவதை தடுக்கும் நோக்கில், தங்கத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: