அப்பாவி மக்கள் அடித்து கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்பாக பதில் அளிக்குமாறு 8 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: அப்பாவி மக்கள் அடித்து கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்பாக பதில் அளிக்குமாறு 8 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் தாக்குதலை தடுக்ககோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு பல்வேறு  தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.

இது ஒரு புறம் இருக்க இந்த அறிவிப்புக்கு பின்னர், பசு பாதுகாவலர்கள் என் பெயரில் மாடுகளை ஏற்றி  செல்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்தது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் அப்பாவி மக்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தி உயிரை பறித்தனர். பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நாடு முழுவதிலும் ஆங்காங்கே வன்முறைகள் அதிகரித்த வண்ணமிருந்தன. இந்நிலையில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு  உச்ச  நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம், உச்சநீதிமன்றம் 12 அம்சங்கள் கொண்ட வழிகாட்டும் நெறிமுறைகளை வழங்கியது. இந்த வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி இதுகுறித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த முறை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 29 மாநிலங்களில் 9 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களில் 2 மட்டுமே அறிக்கை சமர்ப்பித்தன. இதையடுத்து, பிற மாநிலங்களும் அறிக்கை சமர்ப்பிக்காவிட்டால், அந்தந்த மாநில தலைமைச் செயலாளர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் சந்திரஷூட் உள்ளிட்ட மூவர் அடங்கிய அமர்வின் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை தொடுத்த மனுதாரர், உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு வழக்கை கொண்டு வந்தார். இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், பதில் அளிக்காத 8 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்திற்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: