நூலகவியலின் ஐந்து விதிகள்!

நூலகவியலின் ஐந்து விதிகள் இந்திய நூலகவியலின் தந்தை எனக் கொள்ளப்படும் எஸ். ஆர். ரங்கநாதனால் 1931 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டவை. இவை, நூலக முறைமை ஒன்றை இயக்குவதற்கான கொள்கைகளை விளக்குகின்றன. உலகம் முழுவதிலும் உள்ள பல நூலகர்கள் இவற்றைத் தமது கொள்கைகளுக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளனர்.

ஐந்து விதிகளும் பின்வருமாறு:

1. நூல்கள் பயன்பாட்டுக்கானவை

2. ஒவ்வொரு வாசகருக்கும் அவரது நூல்

3. ஒவ்வொரு நூலுக்கும் அதன் வாசகர்

4. வாசகருடைய நேரத்தைச் சேமிக்கவேண்டும்

5. நூலகம் ஒரு வளரும் உயிரினம்

முதல்விதி:

நூல்கள் பயன்பாட்டுக்கானவை முதல் விதி நூலகச் சேவைக்கான அடிப்படையை உள்ளடக்குகிறது. நூல்களை வெளியே எடுக்காமலிருப்பதற்காக அவற்றைப் பூட்டி வைத்திருப்பதையும், பயன்படுத்துவதிலும் பார்க்கச் சேமிப்பதற்கும் பாதுகாப்பதற்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதையும் ரங்கநாதன் கவனித்தார்.

சேமிப்பதையும் பாதுகாப்பதையும் மறுக்காதபோதும் இந்த நடவடிக்கைகள் அவற்றைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவே இருக்கவேண்டும் என்றார். பயன்படுத்தாவிட்டால் நூலக நூல்களுக்குப் பெறுமதிப்பு கிடையாது. பயன்படுத்துவது என்பதை வலியுறுத்தியதன் மூலம், நூலக அமைவிடம், இரவல் கொடுப்பது தொடர்பான கொள்கைகள், திறந்திருக்கும் நேரமும் நாட்களும், நூலகத் தளவாடங்கள், பணியாளர்களுடைய தரம் போன்ற, மக்களுக்கு நூல்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துவது தொடர்பான விஷயங்கள் குறித்துக் கவனத்தை ஈர்த்தார்.

இரண்டாவது விதி:

ஒவ்வொரு வாசகருக்கும் அவரது நூல் இந்த விதி, சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தமக்குத் தேவையான நூல்களைப் பெற்றுக் கொள்ளக்க்கூடியதாக இருக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது. எல்லாச் சமூகச் சூழல்களையும் சேர்ந்த தனிப்பட்டோர் எல்லோரும் நூலக சேவைகளைப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள் என்றும், கல்வியே நூலகப் பயன்பாட்டுக்கான அடிப்படை என்றும் ரங்கநாதன் கருதினார்.

இந்த உரிமைகள், நூலகங்கள்/ பணியாளர், நூலகப் பயனர்கள் என்னும் இரு தரப்பாருக்கும் உரிய கடமைகளையும் கொண்டுள்ளது. தாங்கள் சேவை வழங்கும் மக்கள் பற்றிய நேரடியான அறிவு நூலகர்களுக்கு அவசியம். நூலகச் சேமிப்புகள் சமூகத்தின் சிறப்பான தேவைகளை நிறைவேற்றக் கூடியனவாக இருக்கவேண்டும் என்பதுடன், நூலகங்கள், பலதரப்பட்ட வாசகர்களையும் கவரும் வகையில் ஊக்கமளித்து விளம்பரம் செய்யவும் வேண்டும்.

மூன்றாவது விதி:

ஒவ்வொரு நூலுக்கும் அதன் வாசகர் இரண்டாவது விதியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாயினும் இந்தவிதி நூலக எண்ணிக்கையில் கவனத்தைச் செலுத்துகிறது. இது, நூலகம் ஒன்றில் உள்ள ஒவ்வொரு நூலுக்கும், அதனைப் பயன்படுத்தக்கூடிய ஒருவர் அல்லது பலர் இருக்கவேண்டும் என்பது இதன் பொருள். ஒவ்வொரு நூலும், பொருத்தமான வாசகரைச் சென்றடைவதை உறுதி செய்துகொள்வதற்கு, ஒரு நூலகம் பல வழிமுறைகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்பது ரங்கநாதனின் வாதம். ஒரு வழிமுறை, நூலக நூல்களைப் பெற்றுக் கொள்வதற்கான அடிப்படை விதிகளோடு தொடர்புள்ளது. குறிப்பாக திறந்த தட்டுக்களில் நூலக உருப்படிகளை வைக்கவேண்டிய தேவை இவற்றுள் ஒன்று.

நான்காவது விதி:

வாசகருடைய நேரத்தைச் சேமிக்கவேண்டும் நூலகப் பயனர்களுடைய தேவைகளை நிறைவேற்றக்கூடிய வல்லமை நூலகச் சேவையின் உயர்தரத்தின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்வது இவ்விதியின் சிறப்பு. இதற்காக, பொருத்தமான வணிக முறைகளைப் பயன்படுத்தி நூலக மேலாண்மையை மேம்படுத்தவேண்டும் என ரங்கநாதன் ஆலோசனை வழங்கினார். நூலகச் சேகரிப்புகளை ஒரு இடத்தில் மையப்படுத்துவது சாதகமானது என அவர் கருதினார்.

ஐந்தாவது விதி:

நூலகம் ஒரு வளரும் உயிரினம் நூலகமொன்றின் சூழல் மாற்றங்களையன்றி உள்ளார்ந்த மாற்றங்களின் தேவையையே இவ்விதி முக்கியமாகக் கவனத்தில் கொள்கிறது. பணியாளர் எண்ணிக்கையின் வளர்ச்சி, நூலகச் சேகரிப்புகளின் வளர்ச்சி, பயனர் எண்ணிக்கை வளர்ச்சி என்பவற்றுக்கு இடமளிக்கக்கூடிய விதத்தில் நூலகம் இருக்கவேண்டும் என்பதே ரங்கநாதனின் கருத்து. இது, கட்டடம், வாசிப்பதற்கான இடவசதி, நூல் அடுக்குகள், விவரப்பட்டியலுக்கான இடவசதி என்பனவற்றின் வளர்ச்சிக்கு இடமளிக்கவேண்டும் என்பதையே குறிக்கிறது.         

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: