×

தேசிய நூலகர் தினம் உருவானது எப்படி?

சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஒரு நூலைத் தேடி எடுக்கவேண்டுமெனில் ஒவ்வொரு தளத்திலும் நுழைவாயிலில் உள்ள கணினியில் நூலின் பெயரையோ ஆசிரியர் பெயரையோ தட்டச்சு செய்தால் எந்த அலமாரியில் எந்த இடத்தில் அந்த நூல் உள்ளது என்பதைக் கணினியில் பார்த்து எளிதாக எவ்வித அலைச்சலும் இன்றி எடுத்து வரலாம். இது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனால் விளைந்த நன்மை.

பொதுவாக எல்லா நூலகங்களிலும் நூல்களை இவ்வளவு எளிதாக நாம் தேடி எடுத்துவிட இயலாது. ஒரு நூலைத் தேடி எடுப்பதற்குள் களைப்புதான் மிஞ்சும். நூல்களை அப்படி அடுக்கி வைத்திருப்பார்கள். நூலகங்களில் நூல்களை எவ்வாறு அடுக்கி வைப்பது என்பது மிகப்பெரிய சவாலான பணிதான். அதற்கு ஒரு வழிமுறையை நம் நாட்டுக்கு வழங்கியவர் ஒரு தமிழர் என்பதில் நமக்குப் பெருமைதான். அந்தப் பெருமைக்குரியவர்தான் இந்திய நூலகத் தந்தை என்று போற்றப்படும் சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன்.

எஸ்.ஆர்.ரங்கநாதன்

இவர் நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகிலுள்ள வேதாந்தபுரம் என்னும் ஊரில் 1892 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12 ஆம் நாள் ராமாமிர்தம் சீத்தாலட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வியை சீர்காழியில் முடித்து சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் சைதாப்பேட்டையில் இருந்த ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியத் தகுதிச் சான்றிதழையும் பெற்றார். உயர்கல்வியை முடித்துவிட்டு மங்களூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்த அரசாங்கப் பள்ளிகளிலும், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கற்பித்து வந்தார். அதன் பிறகு சென்னை மாநிலக்கல்லூரியில் கணிதவியல் துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியர் தொழிலில் விருப்பம் இருந்தாலும் அவரது ஊதியம் குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை.  

முதல் நூலகர்

தனது வருமானத்தை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கில் சென்னைப் பல்கலைக்கழகத்தில், நல்ல சம்பளத்துடன் கூடிய நூலகர் வேலைக்கு விண்ணப்பம் செய்தார். 1924ல் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் முதல் நூலகராக பணியில் சேர்ந்தார். ஊதியம் அதிகம் என்றாலும் கற்பித்தல் பணியில் கிடைத்த மன நிறைவு நூலகர் பணியில் இல்லை. அதனால் அப்பணி அவரைக் கவரவில்லை. எனினும் மாநிலக்கல்லூரி முதல்வரின் ஆலோசனைப்படி, லண்டன் சென்று, நூலக அறிவியலில் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றார். அங்கிருந்து நாடு திரும்பியதும், பல்கலைக்கழக நூலகத்தை சீரமைக்கத் தொடங்கினார். அதனை அடுத்து சென்னை நூலகச் சங்கத்தை நிறுவினார். இது நூலக இயக்கத்தின் சின்னமாக மாறியது. அதன் அமைப்புச் செயலாளராக 1928 முதல் 1945 வரை செயல்பட்டார்.

நூலகத்துறைக்கு ஆற்றிய பணிகள்

1948-ல் இவரது முயற்சியால்தான் சென்னை பொதுநூலகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படிதான் உள்ளாட்சி நிறுவனங்கள் வசூல் செய்யும் சொத்துவரியில் 10 சதவீதம் நூலகத்துறைக்கு வழங்கப்படுகிறது. இந்திய நூலகத்துறைக்கு அவர் அளித்த கொடைதான் கோலன் பகுப்புமுறை. நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையே கோலன் பகுப்புமுறை எனப்படுகிறது. இந்தப் பகுப்பு முறை இவரால் ஆராய்ந்து கண்டுப்பிடிக்கப்பட்டதாகும். இது நூலகத்துறையைச் சார்ந்த பல மேனாட்டு அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதுவரை கையாளப்பட்டுவந்த பகுப்பு முறையைக்காட்டிலும் கோலன் பகுப்புமுறை மாறுபட்டதாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருந்தது. இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்களும் இக்கோலன் பகுப்புமுறையைத்தான் இன்றும் பயன்படுத்துகின்றன.

நூலக அறிவியல் துறைக்கு வித்திட்டவர்    

நூலக அறிவியல் பள்ளி என்ற அமைப்பைத் தொடங்கி, 15 ஆண்டுகள் அதன் இயக்குநராகப் பணியாற்றினார். தன் சேமிப்பு முழுவதையும் அதற்காக வழங்கினார். 1945-ல் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நூலக அமைப்பை மேம்படுத்தும் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு 2 ஆண்டுகள் தனி ஒருவராக அங்கிருந்த ஒரு லட்சம் நூல்களை வகைப்படுத்தினார். மேலும் அங்கு நூலக அறிவியல் பட்டயப்படிப்பை அறிமுகப்படுத்தி அவரே அதற்கான ஆசிரியராகவும் செயல்பட்டார்.

அதன் பிறகு டெல்லி பல்கலைக்கழக அழைப்பை ஏற்று அங்கு சென்று நூலக அறிவியல் பாடம் கற்பித்தார். அவர் அங்கு பணியாற்றியபோதுதான் நூலக அறிவியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டன,இவர் சிறந்த எழுத்தாளரும்கூட. நூலக நிர்வாகம் உள்ளிட்டவை தொடர்பாக 60-க்கும் மேற்பட்ட நூல்கள், 2,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். பல நாடுகளுக்குச் சென்று நூலகம் குறித்து உரையாற்றினார். கடுமையாகப் பாடுபட்டு நூலகம் மற்றும் தகவல் அறிவியலுக்கான புதிய அடிப்படைக் கோட்பாடுகளை நிறுவினார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நூலகராகவும், டெல்லி நூலகத்துறையின் தலைவராகவும் பணியாற்றினார். டெல்லியில் உள்ள நூலகத் தரக்குழுவின் தலைவராகவும் இருந்தார்.

பத்மஸ்ரீ ரங்கநாதன்


நூலகவியலுக்குச் செய்த பங்களிப்புக்காக 1957 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம விருது அளித்து சிறப்பித்தது. மேலும் நூலகத் துறைக்கு ஆற்றியுள்ள அளப்பரிய செயல்களுக்காக எஸ்.ஆர். ரங்கநாதன் “இந்திய நூலகத் தந்தை” எனப் போற்றப்படுகிறார். இவருடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 12ம் நாளை நூலகர் தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறந்த நூலகர்களுக்கு நல் நூலகர் விருதும் இந்த நாளில் வழங்கப்படுகிறது. நூலகத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி ஒரு அறிவார்ந்த சமூகம் உருவாகவேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுவதற்கும் இந்த நாள் பயன்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : சென்னை,எஸ்.ஆர்.ரங்கநாதன்,முதல் நூலகர் , பணிகள்,அறிவியல் துறை
× RELATED அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து...