சென்னையில் ஸ்டெர்லைட் ஆலை குறித்து மூவர் குழு கருத்துக்கேட்பு கூட்டம்

சென்னை : சென்னையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதால் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து வேதாந்த நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்து, மக்களிடம் கருத்து கேட்க ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான மூவர் குழுவை அமைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்த மூவர் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுவட்டார கிராமங்கள், ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். மேலும் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டமும் நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என மனு அளித்திருப்பதாக தருண் அகர்வால் குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இறுதிநாளான இன்று, சென்னை எழிலகத்தில் உள்ள பசுமைத் தீர்ப்பாய வளாகத்தில் தருண் அகர்வாலா தலைமையிலான மூவர் குழுவினர் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை சம்மந்தப்பட்ட தரப்புகள், வழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்வதற்காக இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர், வேதாந்த தரப்பு வழக்கறிஞர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். புகார்கள், பிரச்சனைகள், கோரிக்கைகளை வாய்மொழியாகவும், மனுக்கள் மூலமும் தெரிவிக்கும் வகையில் இந்த கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. பசுமைத் தீர்ப்பாய வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் ஆவணங்கள், மனுக்கள் சமர்பிப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: