பழநி வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் : வெளியாட்கள் நுழைய தடை

பழநி: பழநி வனப்பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் வெளியாட்கள் நுழைய வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். பழநி வனப்பகுதி 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இங்கு சிறுத்தை, வரிப்புலி. கரடி, யானை, மான், கேளையாடு போன்ற விலங்குகள் அதிகளவு வசித்து வருகின்றன. போதிய மழை இல்லாததால் தற்போது பழநி வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது. இதனால் உணவு மற்றும் குடிநீர் தேடி விலங்குகள் வனப்பகுதி அருகில் உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்குள் சென்று வருகின்றன. மேலும் கடந்த சில தினங்களாக பழநி வனப்பகுதி எல்லைகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இதனால் வனப்பகுதி எல்லையோரங்களில் பொதுமக்கள் மேய்ச்சலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பழநி வனப்பகுதிக்குட்பட்ட தேக்கந்தோட்டம் விலங்கடியான் கோயில் அருகே நேற்று சிறுத்தையின் காலடி தடத்தை அப்பகுதிக்கு சென்ற மேய்ச்சல்காரகள் கண்டறிந்துள்ளனர். தவிர, கொடைக்கானல் சாலையில் கருப்பணசுவாமி கோயில்  அருகில் சிறுத்தைகள் சாலையை கடந்து செல்வதை பலமுறை பார்த்துள்ளனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து பழநி வனச்சரகர் கணேஷ்ராமிடம் கேட்டபோது கூறியதாவது, பழநி வனப்பகுதிக்குள் சிறுத்தைகள் நடமாட்டம் இருக்கிறது. இதுதொடர்பாக  எச்சரிக்கை பலகைகள் விலங்கடியான் கோயில் பகுதியில் வைத்துள்ளோம். தவிர, வனப்பகுதிக்குள் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க கூடுதல் வனஅலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவுநேரங்களில் வனப்பகுதியை ஒட்டிய தோட்டங்களில் விவசாயிகள் வெளியில் படுத்துறங்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: