மணல் திருட்டுக்கு புரோக்கரிடம் பரபரப்பாக மாமூல் வசூல் 20 ஆயிரத்தோட, காலையில வந்து பாரு...

* வாட்ஸ் அப்பில் ‘பேரம்’ வைரல்

* சிக்கல் நகர இன்ஸ்பெக்டர் சிக்கினார்

சாயல்குடி: சாயல்குடி அருகே சிக்கல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் முகம்மது நசீர், மணல் புரோக்கரிடம் பேரம் பேசும் ஆடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே சிக்கல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் முகம்மது நசீர். இவர் அப்பகுதியில் நடக்கும் மணல்  கொள்ளைக்கு உடந்தையாக இருப்பதாகவும், வாடிக்கையாக மணல் அள்ளுவோர் பணம் தரவில்லை என்றால், வழக்கு பதிந்துவிடுவேன், கை, கால்களை முறித்து  விடுவேன் என மிரட்டுவதோடு, பொருட்களையும் சேதப்படுத்தியும் வந்துள்ளார். இவரது மிரட்டலுக்கு அஞ்சியும், தொடர்ச்சியாக மாமூல் கொடுப்பதற்காகவுமே  மணல் கொள்ளையர்கள் அடிக்கடி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இன்ஸ்பெக்டருக்கும், மணல் கொள்ளை கும்பலுக்கு புரோக்கராக செயல்பட்ட சிக்கல்  ஊராட்சி மன்ற தண்ணீர் திறப்பாளர் காளிதாஸ் என்பவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்ஸ்பெக்டரிடம் பேசியபோது பதிந்து வைத்திருந்த  வாய்ஸ் ரெக்கார்டை காளிதாஸ் வாட்ஸ்அப்பில் வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் உரையாடல் விபரம் வருமாறு:

இன்ஸ்பெக்டர்: என்ன காளி, போன் அடிச்சா எடுக்கமாட்டேங்கிற, வேலை முடிஞ்சதுனாலயா.

காளிதாஸ்: ஐயா அப்படியெல்லாம் இல்லை, உங்க பெர்மிசனுடன் தான் அடிச்சேன்.

இன்ஸ்பெக்டர்: பாய் அடிச்சானா.

காளிதாஸ்: ஆமாம் 3 நடை அடிச்சுருக்கான். நான் பொட்டல்பச்சேரியில் 3 நடை அடிச்சேன்.

இன்ஸ்பெக்டர்: 4 நடைன்னு சொன்னாங்க....

காளிதாஸ்: வேணும்னா நீங்க கூட வந்து பாருங்க ஐயா.

இன்ஸ்பெக்டர்: சரி, சரி, 20 ஆயிரம் காலையில வந்து தா.

காளிதாஸ்: சரிங்கய்யா.

2வது ஆடியோவில்:

 காளிதாஸ்: ஐயா இன்னிக்கு கண்மாய்க்கு எப்போ மணல் அள்ள வண்டி கொண்டு போகணும்?

இன்ஸ்பெக்டர்: அதிகாலை 2 மணிக்கு மேல போ. யாரு, யாரு போறீங்க.,

காளிதாஸ்: நானும், அவரும் சேர்ந்துதான்யா என மற்றொரு நபரை கூறுகிறார். இதுபோன்று நீள்கிறது அவர்களது பேச்சு.

3வது ஆடியோவில்...

இன்ஸ்பெக்டர்: ஏம்பா காளி, வண்டி எடுத்துக்கிறீயா, எத்தனை வண்டி, 2 வண்டியா, காலையில வந்து பாரு, என அதட்டலுடன் முடிகிறது இந்த ஆடியோ.

இன்ஸ்பெக்டர் முகம்மது நசீர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்ட பகுதிகளில் வேலை பார்த்துள்ளார். வேலை பார்க்கும் இடங்களில் சர்ச்சையில் சிக்கும் இவர்,  தண்டனை பெற்று பல இடங்களுக்கு மாறுதலாகி செல்வது வழக்கமாகி வருவதாகவும், இதனால் இவர் ஏடிஎஸ்பியாக இருக்க வேண்டியவர் இன்ஸ்பெக்டராகவே  இருக்கிறார் என்றும் சக போலீசார் தெரிவித்தனர். மேலும் சிக்கல் பகுதி கண்மாய்களில் மணல் அள்ளும் கும்பல், ஒவ்வொரு முறையும் ‘பார்க்க’ வேண்டும்.  இல்லையென்றால் போன் செய்து மணல் அள்ள செல், எனக்கு பணம் வேண்டும் என்பாராம். பணம் வாங்கும்போது சக போலீசாருக்கும், காவல்நிலைய செலவிற்கும் இன்ஸ்பெக்டர் கொடுக்காததால்தான், சக போலீசாரின் தூண்டுதலின்பேரில் ஆடியோ வெளியானதாக கூறப்படுகிறது. எஸ்.பி. உத்தரவு: இந்த நிலையில், வாட்ஸ் அப் ஆடியோ குறித்து இன்ஸ்பெக்டர் முகம்மது நசீரிடம் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய ராமநாதபுரம் டிஎஸ்பி  நடராஜனுக்கு மாவட்ட எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: