சுருளி சாரல் விழாவில் துணை முதல்வர் கார் முற்றுகை

*அமைச்சர்களின் காரையும் தடுத்து மறியல்

கம்பம்: சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் 4 ஆண்டுகளுக்குப்பின் நேற்று நடந்த சாரல் விழாவில் பங்கேற்ற துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் அமைச்சர்கள் காரை சீர்மரபினர் நலச்சங்கத்தினர் முற்றுகையிட்டு மறியல் செய்தனர்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம் சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை சார்பில் 4 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சாரல் விழா  நடைபெற்றது. தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் வரவேற்றார். சுற்றுலாத்துறை அமைச்சர்  வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கி பேசினார். வனத்துறை அமைச்சர்  திண்டுக்கல்  சீனிவாசன் கண்காட்சியை திறந்து வைத்தார். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குத்துவிளக்கேற்றி அரசின் நலத்திட்ட உதவிகளை  வழங்கி உரையாற்றினார்.

அப்போது சீர்மரபினர் (டி.என்.டி.) மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் அங்கீகாரம்  வழங்கிடக்கோரியும், நலவாரிய நலத்திட்டங்களை  செயல்படுத்தக்கோரியும் அமைப்பின் மாநில பொறுப்பாளர் தவமணியம்மாள் தலைமையில் 30 ேபர், துணைமுதல்வரிடம் மனு கொடுக்க வந்தனர். ஆனால்,  மூவரை மட்டும் போலீசார் மனு அளிக்க அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து விழா முடிந்து துணைமுதல்வர், அமைச்சர்கள்  கிளம்பியபோது அவர்களின் கார்களை  முற்றுகையிட்டு கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தி மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை  நடத்தி சமாதானப்படுத்தினார். இந்த  சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.சுற்றுலாவை மேம்படுத்த நடைபெற்ற இவ்விழாவில் பல்வேறு துறைகள்  சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது.  பேச்சு, பாட்டு, கட்டுரை போட்டிகளில் வெற்றி  பெற்ற  மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தேனி எஸ்பி  பாஸ்கரன், தேனி மாவட்ட வனஅலுவலர் கவுதம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து  கொண்டனர். இன்றும் (24ம் தேதி) சாரல் விழா நடைபெறுகிறது. வழக்கம் போல  ‘திண்டுக்கல்’ சிரிப்பு: சாரல் விழாவிற்கு ஏற்பாடு செய்த தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவை பாராட்டுவதற்காக அவரது பெயரை  சொல்வதற்குப் பதில் ‘தேனி  மாவட்ட கலெக்டர்... அபூர்வா ஐஏஎஸ்’ என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியபோது கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: