ஒப்பந்த நிறுவனத்துக்கு பில் இல்லாமலேயே ரூ.1267 கோடி தந்தது ஏன்?: ஜெயராம் வெங்கடேசன், அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர்

தூத்துக்குடி, மேட்டூர், வட சென்னை அனல் மின்நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரி விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இந்த  நிலக்கரியை கப்பலில் இருந்து இறக்குவதற்காக தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  ஒப்பந்தபடி ஒரு மெட்ரிக் டன் நிலக்கரி  இறக்குவதற்கு ₹24 தரப்படுகிறது. அதை தவிர விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வேலை செய்யும் ஆட்களை பயன்படுத்துவதற்கு துறைமுகத்திற்கு அந்த நிறுவனம் தரும் கட்டணமும்  மின்வாரியம் தருகிறது. ஒப்பந்த நிறுவனம் எவ்வளவு பணம் செலுத்துகிறார்களோ, அந்த ஒரிஜினல் பில்லை காட்டி, மின் வாரியத்திடம் ஒப்பந்த நிறுவனம்  பணத்தை பெற வேண்டும். கடந்த ஏப்ரல் 2011 முதல் மார்ச் 2016 வரை ஒப்பந்த நிறுவனம் சார்பில் ₹240 கோடி விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கட்டணம்  செலுத்தியது. ஆனால், மின்வாரியம் ₹1267 கோடி ஒப்பந்த நிறுவனம் கொடுத்துள்ளது. பில்லை பார்க்காமல் ₹1028 கோடி கூடுதலாக அந்த ஒரு நிறுவனத்திற்கு  அளித்துள்ளது. கடந்த 2001ல் 5 மாதத்திற்கு தான் இந்த நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டது. அதன்பிறகு டெண்டர் விடாமல் 18 வருடங்கள் அந்த நிறுவனத்திற்கு  டெண்டர் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது ஒரு வழக்கை காரணம் காட்டி தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. பில்லை காட்டினால் தான் பணம் தர  வேண்டும் என்று ஒப்பந்தத்தில் விதி உள்ளது. ஆனால், பில்லை பார்க்காமல் பணம் கொடுத்து இருப்பது தொடர்பாக இந்திய தணிக்கை துறை, மின்வாரியம் தனது  தணிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது வரை அந்த ஒப்பந்த நிறுவனத்தின் டெண்டரை முடிவுக்கு கொண்டு வரவில்லை. அந்த நிறுவனத்தை பிளாக் லிஸ்டு செய்யவில்லை. இது எதையும் செய்யாமல்  மின்வாரியம் உள்ளது. இதன் மூலம் ஒப்பந்த நிறுவனத்திற்கும், மின்வாரியத்திற்கும் இடையிலான கூட்டு சதியை பார்க்க முடிகிறது. மின்வாரிய உயர்  அதிகாரிகளுக்கு தெரியாமல் இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை.

கடந்த 2011 முதல் 2016ல் ₹1267 கோடி பணம் கொடுத்திருக்கிறோம் என்று ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தான் தெரிவித்துள்ளார். கண்டிப்பாக மின்வாரிய சேர்மன், தலைமை  பொறியாளருக்கு தெரிந்திருக்கும். இந்திய தணிக்கை துறை இந்த முறைகேடு நடந்திருப்பதை பார்க்க விசாகப்பட்டினம் துறை முகம் சென்று ஆய்வு செய்தது. அவர்கள்,  ஊழல் நடந்திருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க செல்லவில்லை. பில் இல்லாமல் ஏன் பணம் கொடுத்தார்கள் என்பதற்கு இப்போது வரை அமைச்சர் தங்கமணி  விளக்கம் அளிக்கவில்லை. கோர்ட்டில் வழக்கு இருப்பதாக அமைச்சர் தெரிவிக்கிறார். பில் இல்லாமல் பணம் கொடுத்ததற்கும், வழக்கு நிலுவையில் இருப்பதற்கும்  என்ன சம்பந்தம் என்று தெரியவில்ைல. அவர், இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும். கூடுதலாக பணம் கொடுத்தால் தான் 2014 வரை பணம் கொடுப்பதை நிறுத்தி வைப்பதாக மின்வாரியம் கூறுகிறது. அப்படியிருக்கும் போது கூடுதல் பணம்  கொடுத்திருக்கிறார்கள் என்பதற்காக தானே மின்வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. அப்படியானால் முறைகேடு நடந்திருக்கிறது என்பது தானே உண்மை. இது போன்று முறைகேடாக பணம் பெற்ற ஒப்பந்த நிறுவனத்தை ஏன் பிளாக் லிஸ்ட் செய்யவில்லை. கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்கை ஏன் முடிவுக்கு கொண்டு  வரவில்லை. இந்த கம்பெனி முறைகேடு செய்துள்ளது. புது டெண்டர் விட்டாக வேண்டும் என்று மின்வாரியம் கோர்ட்டில் எந்த அபிடவிட்டும் தாக்கல் செய்யவில்லை.  இவர்கள், அந்த கம்பெனிக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று தான் செயல்படுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: