மின்வாரியம் மீது குறை சொல்வோர் தாராளமாக வழக்கு தொடரட்டும்: தங்கமணி, தமிழக மின்சாரத்துறை அமைச்சர்

அனல் மின்நிலையங்களில் இருந்து ஓபன் ஆக்சிஸ் முறையில் தனியார் கம்பெனி வேறொரு கம்பெனிக்கு மின்சாரம் விற்பனை செய்தது. இந்த கம்பெனி மின்சாரம்  தராமலேயே பணம் வாங்கி கொண்டுள்ளது. அந்த கம்பெனி சார்பில் வீலிங் சார்ஜ் கட்டணம் மின்வாரியத்துக்கு வர வேண்டும். ஆனால், அந்த கட்டணமும் தரவில்லை.  இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி தவறு  எங்கே நடந்தது என்பதை கண்டுபிடித்ததே மின்வாரியத்தின் தணிக்கை பிரிவு தான்.  இந்த தவறு கடந்த பிப்ரவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே மாதத்தில், அதாவது மார்ச் மாதம் அடுத்தடுத்த பணிகள் நடந்து, அந்த கம்பெனி மீது நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. உடந்தையாக இருந்து  தவறு செய்த அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.  மின்வாரிய விஜிலென்ஸ் பிரிவு இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.  தனியார் உற்பத்தி செய்கிற மின்சாரத்தை அனல் மின் நிலையத்தில் இருந்து வேறு ஒரு தனியார் கம்பெனி வாங்கியபோது தான் இதுபோன்ற கணக்கை  காட்டியிருக்கிறார்களே தவிர மின்வாரியத்தில் இருந்து எந்த பணமும் கொடுக்கவில்லை. மாறாக, அந்த தனியார் கம்பெனிகள் மின்வாரியத்துக்கு தர வேண்டிய  வீலிங் சார்ஜ் கட்டணம் ₹9.17 கோடியை வட்டியுடன் சேர்த்து ₹11.78 கோடி  கேட்டு நோட்டீஸ் வழங்கினோம். இதை எதிர்த்து அந்த கம்பெனி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு  தொடர்ந்து தடை ஆணை பெற்றுள்ளது. தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.  அனல் மின் நிலையத்தில் உற்பத்தியான மின்சாரத்தை தனியார் கம்பெனி வாங்கியதில் தவறு நடந்துள்ளது; இந்த தவறை மின்சார வாரியம் செய்தது ேபான்று பொய்  பிரசாரம் செய்து வருகின்றனர். ஜெயலலிதா வழியில் நடக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீது  மக்கள் மத்தியில் ஒரு கெட்ட பெயரை  ஏற்படுத்த நினைக்கின்றனர். தவறு நடக்கிறது என்பதை கண்டுபிடித்த மின்வாரியத்தின் மீது புழுதியை வாரி தூற்றுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தவறு  நடக்கிறது என்று சொல்பவர்கள் வழக்கு தொடரட்டும். நான் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். மின்வாரியம் சிறப்பாக பணியாற்றிக்கொண்டு இருக்கிறது. அதை  பாராட்ட வேண்டாம்; மண்ணை வாரி தூற்ற வேண்டாம்.

 பல்வேறு நிலக்கரி சுரங்கங்களில் இருந்து அனல் மின் நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரியை விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இறக்குவதற்கு  சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு 2001ல் தான் டெண்டர் விடப்பட்டது. திமுக ஆட்சியில் கூட அந்த நிறுவனத்திற்கு தான் டெண்டர் விடப்பட்டது.  தொடர்ந்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்ததால் புதிதாக அவர்களது ஆட்சியில் கூட டெண்டர் விடப்படவில்லை.  அந்த நிறுவனத்துக்கு தான் தொடர்ந்து  டெண்டர் வழங்கப்பட்டது. தற்போதும் வழக்கு இருப்பதால் அந்த நிறுவனத்திற்கு டெண்டர் நீட்டிப்பு செய்யப்பட்டே வந்தது.  கோர்ட் தடை உத்தரவால் புதிய டெண்டர் விட முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016 வரை நிலக்கரி இறக்க தனியார் நிறுவனத்திற்கு கூடுதலாக  மின்வாரியம் பணம் எதுவும் தரவில்லை. அந்த குற்றச்சாட்டு மிகவும் தவறானது. கடந்த 3 மாதங்களாக அந்த நிறுவனத்திற்கு நாங்கள் தான் பணம் தர வேண்டியுள்ளது.   தமிழகத்தில் எந்த ஒரு கட்டத்திலும் மின்வெட்டு இல்லை; தொழில்நுட்ப காரணங்களால் சில சமயம் இருக்கலாம்.  அதனால், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக  மின் பற்றாக்குறையை நாங்கள் அமல்படுத்தி விட்டோம் என்று கூறுவதும் தவறானது. அப்படி மின்வெட்டு எதுவும் எங்கள் ஆட்சியில் வரவே வராது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: