உடைந்த மின் கம்பங்கள்.. தொங்கும் மின் வயர்கள்.. சிறுவர்களை அச்சுறுத்தும் கொடுங்கையூர் பூங்கா: அதிகாரிகள் மெத்தனம்

கொடுங்கையூர்: உடைந்த மின் கம்பங்கள், தொங்கும் மின் வயர்களால் பூங்காவுக்கு செல்ல சிறுவர்கள் மற்றும் மக்கள் அச்சப்படுகின்றனர். சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் நடைபயிற்சி செல்வதற்காகவும், சிறுவர்களுக்கு விளையாட்டுவதற்காகவும்   கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திமுக  ஆட்சியில், இதே பகுதியில் உள்ள காந்தி தெருவில் மாநகராட்சி சார்பில், சிறுவர்கள் விளையாட்டு திடல் அமைக்கப்பட்டது. இங்கு, தினமும் மாலை நேரங்களில் சிறுவர்கள் விளையாடுவதும், முதியோர் மற்றும் பெண்கள்  நடைபயிற்சி செய்து வந்தனர். மேலும், மக்கள் அமர்வதற்காக இருக்கை வசதிகள், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டன. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், மாநகராட்சி அதிகாரிகள் இந்த  விளையாட்டு திடலை முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டனர்.

இதனால், இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்து நாசமாகிவிட்டது. மின்விளக்குகள் உடைந்தும், கம்பங்கள் சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில், இந்த விளையாட்டு திடல் இருள் சூழ்ந்து  காணப்படுகிறது. அதே நேரத்தில், இங்குள்ள மின்கம்பங்களில் உள்ள மின்சார வயர்கள், வெளியே ஆபத்தான நிலையில் சிறுவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இதனால், இங்கு விளையாட வரும் சிறுவர்கள்,  இருக்கையில் அமரும் மக்களுக்கு ஆகியோருக்கு மின்சாரம் பாய்ந்து பெரும் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடந்த ஒரு ஆண்டுக்கு முன் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தனர். அதனால், எங்களது பிரச்னையை கவுன்சிலரிடம் கூறி முறையிடுவோம். ஆனால், தற்போது எங்களுக்காக பேச  யாரும் இல்லை. இதனால், மாநகராட்சி அலுவலகத்தில் சென்று புகார் அளித்தாலும், அது எங்கள் பிரிவில் இல்லை. வேறு அதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள் என கூறி அலைக்கழிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி  உயர் அதிகாரிகள், மேற்கண்ட பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும். உடைந்துள்ள உபகரணங்களையும், மின் விளக்குகளையும் சரி செய்ய வேண்டும். அபாய நிலையில் உள்ள மின்வயர்களை அப்புறப்படுத்தி சீரமைக்க  வேண்டும்’’.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: