×

காவலரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பில் மது போதையில் கொடுமை செய்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, போலீஸ்காரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆவடி, திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகர், காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் அருண் கணேஷ் (26). ஆவடியிலுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5ம் அணி போலீஸ்காரர். இவரது மனைவி ரேவதி (23). சொந்த ஊர்  காஞ்சிபுரம் அருகே படப்பை கிராமம் ஆகும். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த 2016ம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு அரிஷ் (2) என்ற ஆண்  குழந்தை உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு அருண் கணேஷ், தனது தாத்தா இறுதி சடங்கில் பங்கேற்க சொந்த ஊருக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். நேற்று காலையில் குழந்தையுடன் மார்க்கெட்டுக்கு  சென்றார். மீண்டும், வீடு திரும்பியபோது ரேவதி தூக்கிட்டு தற்கொலை செய்ததை  பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தகவலறிந்து, திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் பெரியதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  பின்னர் அவ்வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது ரேவதி எழுதியிருந்த பரபரப்பு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் ரேவதி கூறியிருப்பதாவது: அருண் கணேஷ் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். பின்னர்,  என்னை கொடுமை செய்கிறார். மேலும், என் மீது வெறுப்பையும் காட்டி வருகிறார். வெளி இடங்களுக்கும் அழைத்து செல்வதில்லை. எனவே நான் தற்கொலை செய்துகொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவடி உதவி கமிஷனர் (பொறுப்பு) கண்ணன் வழக்குப்பதிவு செய்து அருண் கணேஷிடம் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருவள்ளூர் ஆர்.டி.ஓவும் விசாரிக்கிறார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : The guardian's wife, Suicide, letter passed
× RELATED மீண்டும் அறிமுகமான முதல்...