×

தடக்... தடக்... சத்தமும் இனி குறையும் விமானங்களில் இருப்பதைபோன்று ரயில்களுக்கும் வருகிறது கருப்பு பெட்டி: 100 நவீன ரயில்பெட்டிகளில் இடம்பெறுகிறது

நாகர்கோவில்: விமானத்தை போன்று ரயில்களிலும் கருப்பு பெட்டி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதிநவீன வசதிகள் இடம்பெறும் இந்த ரயில் பெட்டிகளால்  ரயில்கள் இயக்கத்தின்போது சத்தமும் குறையும். விமானங்களில் விபத்துகள் நடைபெறும்போது அதில் உள்ள கருப்பு பெட்டி விபத்து நடந்த விதம், காரணங்களை கண்டறிய உதவியாக இருக்கும். இதனை போன்று  ரயில்களிலும் கருப்பு பெட்டிகளை இணைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் 100 கருப்பு  பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. ரயில்களில் முதன்முறையாக இதுபோன்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் இந்த நவீன ரக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வெப்பநிலை மாற்றங்கள் காரணமாக  கேபிள்களில் பிரச்னை ஏற்படுவதை கருப்பு பெட்டிகள் கண்டுபிடிக்கும். விபத்துகளின்போது ஒலி, ஒளி காட்சிகள் உள்ளிட்டவற்றையும் சேகரித்து  படம்பிடிக்கும். பெட்டிகளின் நிலையை விஞ்ஞான ரீதியாக பதிவு செய்து பயணிகளுக்கு அறிவிக்கும் வகையிலும் இந்த பெட்டிகள் தயார் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பெட்டியுடன்  சக்கரங்களில் சென்சார் வசதியும் இடம்பெறும். இதன்வாயிலாக ரயில் தண்டவாளத்தின் தன்மை பரிசோதிக்கப்படும். விபத்துகள்  நடைபெறுவதை முன்கூட்டியே கண்டறியும் வகையில் இந்த கணினி தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயிலில் ‘பாசஞ்சர் இன்பர்மேஷன் அன்ட் கோச்  கம்ப்யூட்டிங் யூனிட்’ ஒன்று செயல்படும். தனி நெட்வொர்க் வாயிலாக பெட்டிகள் முழுவதும் ஜிஎஸ்எம் வாயிலாக இவை இணைக்கப்படும். பயணிகள் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா வசதிகளும் இந்த நவீன  ரயில் பெட்டிகளில் இடம்பெறும்.

ஒவ்வொரு இடத்திலும் ரயில்வே ஏற்படுத்துகின்ற வசதிகள், பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவையும்  ரயில் பெட்டியில் உள்ள திரையில் பயணிகளுக்கு காண இயலும். மேலும் பயணிகளுக்கு  இருக்கையில் அமர்ந்தவாறே தேவையெனில் ரயில்வே அதிகாரிகளை  தொடர்பு கொண்டு பேச இயலும். பெட்டிக்குள் முன்பதிவு செய்யாத பயணிகள் நுழைந்திட கட்டுப்பாடுகள் வரும். வைபை ஹாட்ஸ்பாட் வசதிகளும் பெட்டியில்  இடம்பெறும். தற்போதுள்ள எல்எச்பி பெட்டிகள் நவீன பெட்டிகளாக மாற்றப்பட்டு வருகிறது. சுத்தம் மற்றும் பாதுகாப்பை மையப்படுத்தி இந்த பெட்டிகள்  தயாரிக்கப்படுகிறது. தற்போதுள்ள பெட்டிகளைவிட கூடுதல் இருப்பிட வசதியையும் இந்த  பெட்டிகளில் ஏற்படுத்த இயலும்.தற்போதுள்ள ரயில் பெட்டிகள் பயணத்தின்போது கடுமையான சப்தம் எழுப்பும். இதற்கு அதன் எடையும் ஒரு காரணம். ஆனால் புதியதாக தயாரிக்கப்படுகின்ற  பெட்டிகள் அலுமினியம் கொண்டு தயார் செய்யப்படுகிறது. இதனால் ரயில்கள் இயக்கத்தின்போது சப்தம் குறையும். இந்த ரயில் பெட்டிகளுக்கு ஒவ்வொன்றுக்கும்  கூடுதல் ₹14 லட்சம் வரை செலவிடப்படுகிறது. எல்எச்பி பெட்டிகள் கடந்த 2000ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முதன் முதலில்  ஜெர்மனியில் ஆல்ட்ரோம் எல்எச்பி கம்பெனி தயாரிப்புகளாக வாங்கப்பட்டன. ஜனசதாப்தி ரயில்களுக்காக இந்த பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்பட்டன.  தொழில்நுட்ப வசதிகள் பரிமாற்றத்திற்கு பின்னர் இந்தியாவில் கபூர்த்தலையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் ரயில்வேயே எல்எச்பி பெட்டிகளை தயாரிக்க  தொடங்கியது. தற்போது நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சேர்த்து இப்போது ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஸ்மார்ட் பெட்டிகளாக  ரயில்வேயால் தயார் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tracks ... noise ... nois,trained trains,black box,100 modern trainboats
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...