வேளச்சேரி ரயில் நிலையம் அருகே ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் மக்கள்: நடைமேம்பாலம் அமைக்கப்படுமா?

வேளச்சேரி: வேளச்சேரி மெயின் ரோட்டில் பறக்கும் ரயில் நிலையம் அருகே பொதுமக்கள் ஆபத்தான முறையில் சாலையை கடப்பதால் விபத்தில் சிக்குகின்றனர். இதை தடுக்க நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற  கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை புறநகர் பகுதியான வேளச்சேரியில் பிரபல நகைக்கடைகள், துணிக்கடைகள், ஷாப்பிங் மால்கள், சினிமா தியேட்டர்கள், ஓட்டல்கள், தனியார் பள்ளி, கல்லூரி, வர்த்தக நிறுவனங்கள், நூற்றுக்கணக்கான கடைகள்  உள்ளிட்டவை அமைந்துள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. மேலும், பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகியவை அமைந்துள்ளதால், சுற்றுப் பகுதிகளான தரமணி, பெருங்குடி, மடிப்பாக்கம், உள்ளகரம்  புழுதிவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், பள்ளிக்கரணை, ஜல்லடியன்பேட்டை, மேடவாக்கம், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தினசரி இங்கு வந்து ரயில், பஸ் பிடித்து சென்னையின்  பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

மேடவாக்கம் மார்க்கமாக வேளச்சேரி வருபவர்கள் எதிர் புறத்தில் உள்ள ரயில் நிலையம், கடைகள், பள்ளிக்கு செல்ல வேண்டுமெனில், விஜயநகர் சந்திப்பு சிக்னல் அல்லது ரயில்வே மேம்பாலத்தின் அடிப்பகுதி வரை சுமார் 300  மீட்டர் தூரம் சென்று வேளச்சேரி மெயின் ரோட்டை கடக்கும் நிலை உள்ளது. இதனால், காலை, மாலை நேரங்களில் அவசர கதியில் பலர் சென்டர் மீடியனை தாண்டி ஆபத்தான முறையில் சாலையை கடக்கின்றனர். குறிப்பாக,  பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பலரும் ஆபத்தான முறையில் சாலையை கடப்பதால் விபத்தில் சிக்குகின்றனர். மேலும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.எனவே, போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்து சம்பவங்களை தடுக்க வேளச்சேரி மெயின் ரோட்டில் ரயில் நிலையம் அருகே நடைமேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என  பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: