நெடுஞ்சாலை, குடியிருப்பு பகுதிகளில் திறக்கப்பட்ட கடைகளை மூட சொன்னா.. கடற்கரையில புதுசா டாஸ்மாக் திறக்குறாங்க..

* இனி குளுகுளு காற்றுடன் பாரில் குடிமகன்கள் கும்மாளம்தான்

* அமைச்சரின் நண்பர் இடத்தில்  அமைக்க கலெக்டர் பச்சை கொடி

* கல்வி திட்டத்துல அதிகாரிகள் ‘அவுட்’.. மதுவுல  மட்டும் ‘டாப்’

எண்ணூர்: நெடுஞ்சாலை, குடியிருப்பு பகுதிகளில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது கடற்கரையில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் அனுமதி வழங்கி  உள்ளனர். மூத்த அமைச்சரின் நெருங்கிய நண்பர் என்பதால், அமைச்சரின் உத்தரவின்பேரில் கடையை திறக்க சென்னை கலெக்டர் அனுமதி வழங்கி உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ‘‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு, புகை பிடித்தல் உயிரை கொல்லும்’’. இந்த வாசகம் இளைஞர்களின் எல்லோர் மனதிலும் ஆழமாக பதிந்து இருக்கும். இதை மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை. காரணம், எல்லாம்  திரையரங்களிலும் படம் திரையிடுவதற்கு முன் போடப்படும் விழிப்புணர்வு வாசகம். மக்களின் உடல் நலத்தில் அக்கறையுடன் வெளியிடும் அரசுதான் டாஸ்மாக் கடைகளை மூளை முடுக்கெல்லாம் திறக்க தீயா வேலை செய்து  வருகிறது. மதுவால் குடும்பத்தில் ஏக்கப்பட்ட பிரச்னை. குடும்ப தலைவன் குடிக்கு அடிமையானதால், குழந்தைகள் நடுதெருவில் தவிக்கும் நிலை இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கிறது. அந்த குழந்தைகளின் கதறலை கேட்டு  கூட இரக்கமின்றி அதிகாரிகள் கடைகளை திறக்க ஆர்வம் காட்டுவதுதான் வேதனையாக இருக்கிறது.

பூரண மதுவிலக்கு கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தும் ஒரு மதுக்கடையை கூட அரசு மூட முன்வரவில்லை. மாறாக மதுவிலக்கு எதிராக போராடிய போராளிகளை தான் நாம் இழந்திருக்கோம். மதுவிலக்குக்கு  எதிராக செல்போன் டவரில் ஏறி போராடிய காந்தியவாதி சசிபெருமாளை கீழே இறக்குவதில் அதிகாரிகள் காட்டிய அலட்சியத்தால், செல்போன் டவரிலேயே அவருடைய உயிர் பிரிந்தது.இந்நிலையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூடவேண்டும் என கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த  டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தமிழகம் முழுவதும் சுமார் 3400 டாஸ்மாக் கடைகள் அதிரடியாக மூடப்பட்டன. இதனால் அரசுக்கு அதிக வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில  நெடுஞ்சாலைகள் அனைத்தும் மாவட்ட சாலைகளாக மாற்றி மூடப்பட்ட மதுக்கடைகளை அரசு திறந்தது.

இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி,  ‘‘டாஸ்மாக்கில் வரும் பணத்தில் தான் ஆசிரியர்களுக்கே சம்பளம் கொடுக்கிறோம். அதனால், டாஸ்மாக்கை மூடும் எண்ணம் இல்லை’’ என்று தெரிவித்தார். இந்த பேச்சு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.  அமைச்சரின் பேச்சுக்கு ஆசிரியர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்தன.  

 இந்நிலையில், அரசுக்கு எதிராக போராடுவர்கள் அனைவரும் மீது கடும் சட்டம் பாய்கிறது. இதை மக்கள் அனைவரும் கண்கூடாக பார்த்து வருகின்றனர். சமீபத்தில், விருதுநகரில் மதுவிலக்கு எதிராக தந்தையுடன் போராடிய  சட்ட கல்லூரி மாணவி நந்தனியை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சணை செய்து அவரது தந்தையும் பாஜவினர் தாக்க முயன்றனர். இதேபோல், பல்வேறு சம்பங்கள் தினமும் அரங்கேறி வருகின்றனர்.

கடந்த தேர்தலின் போது, அதிமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அவர் வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் தற்போதைய அரசு கூடுதலாக  மதுக்கடைகளைதான் திறந்து வருகிறது. பணம் இருந்தாலும் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஏற்ப, அனுமதியே இல்லாத கடற்கரையில் பார் வசதியுடன் டாஸ்மாக்கை திறக்க அதிகாரிகள் பச்சை கொடி காட்டி உள்ளனர். மூத்த  அமைச்சரின் நெருங்கிய நண்பர் என்பதாலே அங்கு டாஸ்மாக் கடையை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் விவரம் வருமாறு: திருவொற்றியூர் அருகே எண்ணூர் விரைவு சாலை எல்லையம்மன் கோயில் தெருவில் எதிரில் கடற்கரையில் புதிதாக மதுபான கடை ஒன்றை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு பொதுமக்கள் கடும்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . ஆனாலும், டாஸ்மாக் அதிகாரிகள் மதுபான கடையை திறப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் திறக்கப்படும் டாஸ்மாக் கடை கட்டிடத்துக்கான இடம், தமிழக மூத்த  அமைச்சர் ஒருவரின் நண்பருக்கு சொந்தமானது என்றும், அமைச்சரின் உத்தரவுப்படி கடையை திறக்க அதிகாரிகள் தீவிரம் காட்டுகின்றனர். முன்னதாக, இந்த இடம் திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட இடத்தில் இருந்ததால்,  அப்போது டாஸ்மாக் கடையை அமைக்க அனுமதி கேட்டபோது, அப்போதைய திருவள்ளூர் கலெக்டர் அனுமதி வழங்க மறுத்து விட்டார். தற்போது, அந்த இடம் சென்னை மாநகரத்துக்கு உள்ளே வருவதாலும்,, அமைச்சரின்  அழுத்தத்தாலும் இந்த இடத்துக்கு சென்னை கலெக்டர் பச்சை கொடி காட்டி உள்ளதாக கூறப்படுகிறது.  

கடற்கரையை ஓட்டி பார் வசதியுடன் திறக்கப்படும் டாஸ்மாக் கடையால் குளுகுளு காற்று வசதியுடன் குடிமகன்கள்தான் கும்மாளமாக இருப்பார்கள். ஆனால், கடல் சீற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் முதலில்  சேதமடைவது இந்த டாஸ்மாக் கடையாக தான் இருக்கும். காரணம், கடல் அருகிலேயே ஆபத்தை உணராமல் அமைச்சரின் உத்தரவால் கடையை திறக்க தீவிரம் காட்டுகின்றனர் . மனித உயர்கள் மீது அக்கறை காட்ட வேண்டிய  அரசு, பணம் மட்டுமே குறிக்கோளாக வைத்து இளைஞர்கள் எதிர்காலத்தையும், பல்வேறு குடும்பங்களுக்கு ஏற்படும் பிரச்னைக்கு காரணமாக உள்ள டாஸ்மாக்கை திறப்பதில் காட்டும் முனைப்பு வேதனையை அளிக்கிறது. இந்த  முனைப்பை கல்வியில் காட்டி நீட் தேர்வில் அனைத்து தரப்பு மாணவர்களையும் வெற்றி பெற உதவி இருந்தால் சந்தோஷமாக இருந்து இருக்கும். ஆனால், கல்வி திட்டத்தில் அதிகாரிகள் தோல்வி அடைந்து விட்டனர். டாஸ்மாக்  திறப்பதில் அவர்கள் போடும் திட்டம் தான் வேதனையாக உள்ளது என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.   

உயிரிழப்பு ஏற்படும் அபாயம்

பொதுமக்கள் கூறுகையில், ‘‘எண்ணூர் விரைவுச்சாலையில் புதிதாக திறக்கப்பட உள்ள மதுபான கடைக்கு இதற்கு முன்பு இதே இடத்தில் திறக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்து இருந்தார். ஆனால், தற்போது  சென்னை மாவட்ட ஆட்சியர் இதற்கு அனுமதி வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த இடம் போதுமான பாதுகாப்பு இல்லை. கடற்கரையில் இருப்பதால் மது அருந்துபவர்கள் போதை கடலில் விழுந்து உயிரிழக்க  நேரிடும்.மேலும் இந்த பகுதியில் கோயில் இருப்பதோடு அதிக அளவிலான டிரைலர் லாரிகள் சென்று வரக்கூடிய பகுதியாக உள்ளது. இதனால் போதையில் சாலையை கடக்கும்போது விபத்து ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயம்  உள்ளது. எனவே, பாதுகாப்பு இல்லாத இந்த இடத்தில் மதுபானக்கடை திறக்க அரசு அனுமதி வழங்கக்கூடாது .அதையும் மீறி இங்கு மதுபான கடை திறக்கப்பட்டால் பொதுமக்கள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டம்  நடத்துவோம்’’.   இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த தேர்தலின் போது, அதிமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அவர் வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் தற்போதைய அரசு கூடுதலாக  மதுக்கடைகளைதான் திறந்து வருகிறது.

லட்சக்கணக்கில் லஞ்சம்

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், முதலில் கடற்கரை பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதியே இல்லை. இந்த கடையால் குடிமகன்களின் உயிருக்குதான் ஆபத்து. இருப்பினும், கடற்கரையில் திறக்கப்பட உள்ள  மதுபானக்கடை உரிமையாளர் மூத்த அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் கடையை திறக்க அதிகாரிகள்  ஆர்வம் காட்டி வருகின்றனர். கடைக்கு அனுமதி வழங்க பல லட்சம் ரூபாய் டாஸ்மாக் அதிகாரிகள்  கையூட்டு பெற்று கொண்டுள்ளனர். எனவே, சட்ட விரோதமாக கையூட்டு பெற்றுக்கொண்டு கடற்கரை பகுதியில் டாஸ்மாக்கை திறக்க அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: