50 கோடி ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்: தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேச்சு

ராஞ்சி: ‘‘ஏழைகளுக்கு சேவை செய்யும் ஆயுஷ்மான் பாரத் திட்டம், சுகாதார துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்’’ என பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கும் வகையிலான ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா-ஆயுஷ்மான் பாரத்’ என்ற காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்தது.  இதன்படி, ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்பில் 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி மக்கள் பலனடைவார்கள். இத்திட்டத்தின் கீழ் இதய நோய்கள், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு உள்ளிட்ட 1,354 நோய்களுக்கு  இலவசமாக சிகிச்சை பெறலாம்.இத்திட்டத்தின் தொடக்க விழா ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடந்தது. பிரதமர் மோடி திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

உலகிலேயே அரசின் மிகப்பெரிய இலவச மருத்துவ சிகிச்சை திட்டம் இது. இத்திட்டத்தில் பயனடைபவர்களின் எண்ணிக்கை, அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகளையும் சேர்த்த மக்கள் தொகைக்கு இணையானது.  இத்திட்டத்தை சிறப்பாக வடிவமைத்த அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் 50 கோடி பயனாளிகளின் ஆசிர்வாதத்தை பெறுவார்கள்.

மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏழை மக்களுக்கு ஏற்படக் கூடாது என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை. அப்படி அவர்கள் செல்ல நேரிட்டால், ஆயுஷ்மான் திட்டம் அவர்களுக்கு துணை நிற்கும். நம் நாட்டில்  பணக்காரர்கள் அனுபவிக்கும் அனைத்து வசதிகளையும் ஏழைகளும் பெற வேண்டும் என்பதற்கான இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு ‘மோடிகேர்’ என்பது உள்ளிட்ட எந்த பெயரை வேண்டுமானாலும் கூறிக்  கொள்ளட்டும். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் ஏழைகளுக்கு சேவை செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பாகவே இதை கருதுகிறேன்.சமூகத்தில் அடித்தளத்தில் வாழும் ஒவ்வொருவரும் இத்திட்டத்தினால் பயனடைவார்கள். முந்தைய அரசுகள் ஏழைகளை வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே பார்த்தன. அவர்களுக்கு எந்த நலனையும் வழங்க  முயற்சிக்கவில்லை. ஆனால், பாஜ அரசு  ஏழைகளுக்கு அதிகாரத்தை வழங்க உழைக்கிறது. இத்திட்டம் மதம், சாதி, இனம், இடம் என எந்த வகையிலும் மக்களை பிரித்துப் பார்க்கவில்லை. தகுதிவாய்ந்த மக்கள் யாராக  இருந்தாலும் பயனடையலாம்.

இத்திட்டம் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடியது. இதில் பயனடைய யாரும் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இத்திட்டத்தின் பயன்களை பெற விரும்பும் பயனாளிகளுக்கு சுகாதார அட்டைகள்  வழங்கப்படும். இதற்கான இலவச தொலைபேசி எண் வாயிலாகவும் தகவல்களை கேட்டு பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் 2, 3ம் கட்ட நகரங்களில் 2,500 நவீன மருத்துவமனைகள் கட்டப்படும். வேலைவாய்ப்புகள் உருவாகும். ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் மொத்தம் 13,000 மருத்துவமனைகள் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம்,  சுகாதார துறையில் மிகப்பெரும் மாற்றத்தை ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏற்படுத்தும்.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். முன்னதாக அவர் சிபாசா, கோதர்மா ஆகிய இடங்களில் 2 மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.

‘வரலாற்று சிறப்புமிக்க நாள்’

ஆயுஷ்மான் பாரத் திட்டம் நேற்றிலிருந்தே அமலுக்கு வந்தது. இத்திட்டத்தை பல்வேறு நகரங்களில் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் இத்திட்டத்தை  மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘‘நம் நாட்டில் இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். இனி ஏழைகள் மருத்துவ சிகிச்சை  செலவுக்காக குடும்ப உறுப்பினர்களிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை. இத்திட்டம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும். இத்திட்டம், ஏழைகளுக்கு ‘மோடி கேடயம்’ இருப்பதையும், அதன் மூலம் அவர்கள் மிகப்பெரிய  பலனடைவதையும் நிரூபிக்கும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: