ஆர்டிஐ கேள்வியால் அதிர்ச்சி பொதுப்பணி துறை அலுவலகத்தில் திடீரென வைக்கப்பட்ட தலைவர் படங்கள்: அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு

சென்னை: அலுவலகத்தில் தலைவர்கள் படம் இல்லாதது குறித்து ஆர்டிஐயில் சமூக ஆர்வலர் கேள்வி கேட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அலுவலக  வளாகத்தில் தலைவர்கள் படத்தை உடனே வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இதில், வருவாய்துறை, பதிவுத்துறை, வணிகவரித்துறை  உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் அடக்கம். பொதுவாக, அரசு அலுவலகங்களில் காந்தி, நேரு, காமராஜர், அம்பேத்கர் உட்பட 13 தலைவர்களின்  புகைப்படங்களை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான  அரசு அலுவலகங்களில் தலைவர்கள் படம் வைக்கப்படவில்லை என்று  கூறப்படுகிறது. ஆனால், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படங்கள் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. மற்ற தலைவர்கள் படம்  வைக்காமல் புறக்கணிப்பதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக பொதுப்பணித்துறைக்கு சமூக ஆர்வலர் ஒருவர் எத்தனை அரசு அலுவலகங்களில் தலைவர்கள் படம் வைக்கப்பட்டுள்ளது.  பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தலைவர் படம் ஏன் வைக்கவில்லை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தாக  கூறப்படுகிறது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக எழிலக வளாகத்தில் காமராஜர், அம்பேத்கர் படங்களை வைத்தனர். மற்ற  அலுவலகங்களில் தலைவர்கள் படம் வைப்பதற்கான நடவடிக்கையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கூட தலைவர்கள் படம்  வைக்கப்படவில்லை. இதே போன்று பல அலுவலகங்களில் தலைவர் படம் இல்லை. இதை கேள்வி எழுப்பி சமூக ஆர்வலர் ஒருவர் கடிதம் எழுதினார். இதையடுத்து  பயந்து போன துறை தலைமை உடனடியாக அம்பேத்கர், காமராஜர் படத்தை வைத்தது. தொடர்ந்து மற்ற அலுவலகங்களில் தலைவர் படம் வைக்கவும் அந்தந்த துறையை  சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: