தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 67,654 வாக்கு சாவடிகளில் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்: பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக  தமிழகம் முழுவதும் நேற்று இரண்டாம் கட்ட சிறப்பு  முகாம் நடந்தது. இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 1ம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு 2019ம் ஆண்டுக்கான   வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொண்டு  வருகிறது. இதற்காக 1-1-2019 அன்று 18 வயது பூர்த்தியானவர்கள்   அனைவரையும் வாக்காளர் பட்டிலில் சேர்க்க  இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.  இதற்காக கடந்த 1ம்தேதி சிறப்பு  சுருக்கமுறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.இந்த வரைவு வாக்காளர் பட்டியல் மாநகராட்சி அலுவலகம், நகராட்சி  மற்றும் உள்ளாட்சி அலுவலகம், அனைத்து வாக்குச்சாவடி மையங்களில்  வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களுக்கு பொதுமக்கள் நேரில் சென்று தங்களது  பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என சரிபார்த்து  வருகின்றனர்.  மேலும் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூர்த்தி  செய்த விண்ணப்பங்களை அக்டோபர் 31ம் தேதி  வரை அளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அலுவலகங்களுக்கு செல்வோரின்  வசதிக்காக செப்டம்பர் 9, 23ம் தேதி, அக்டோபர் 7 மற்றும் 14ம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு  முகாம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 9ம் தேதி முதல் கட்ட சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் பெயர் சேர்க்க 3,05,241 பேரும்,  நீக்கம் செய்ய 20,423 பேரும்,  திருத்தம் செய்ய 34,109 பேரும், வசிப்பிட மாறுதல் செய்ய 23,460 பேரும் என 3 லட்சத்து 83 ஆயிரத்து 233 பேர் விண்ணப்பித்திருந்தனர்.   இந்நிலையில் 2ம் கட்ட சிறப்பு முகாம் நேற்று மாநிலம் முழுவதும்  காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த முகாம்  மாலை 5 மணி வரை நடந்தது. மாநிலம் முழுவதும் 67,654   வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடந்தது. சிறப்பு  முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்காளர் பட்டியலில்  பெயர்களை சேர்த்தல்,  திருத்தம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டனர்.

குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன்  கலந்து கொண்டு தங்களது பெயர்களை சேர்க்க விண்ணப்பித்ததை காண  முடிந்தது.மேலும் வாக்குச்சாவடி  மையங்களுக்கு வெளியே அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு வசதியை ஏற்படுத்தியிருந்தனர். அதாவது   அவர்களும் வாக்காளர் பட்டியலை வைத்து கொண்டு பெயர்களை சரிர்க்கும் பணியில் ஈடுபட்டனர். புதிதாக பெயர் சேர்க்கப்பட்டவர்கள்  குறித்து ஆய்வு நடத்தி  ஜனவரி 4ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3,754  வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடந்தது. காலை 10 மணிக்கு தான்  முகாம் நடக்கும் என  அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் காலை 8 மணி முதலே ஏராளமான வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் வர  தொடங்கியது குறிப்பிடத்தக்கது.  அதுமட்டுமின்றி www.elections.tn.gov.in மற்றும் nvsp.in என்ற இணையதளம் மூலம் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம்  செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: