ஓட்டப் பந்தயத்தில் 102 வயது மூதாட்டி உலக சாம்பியன்: ஈட்டி எறிதலிலும் தங்கம் வென்றார்

புதுடெல்லி: சண்டிகரை சேர்ந்த 102 வயது மூதாட்டி ஸ்பெயினில் நடைபெற்ற உலக முதியோருக்கான ஓட்டப் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் பெற்றும், ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் பெற்றும் அசத்தியுள்ளார்.முதியவர்கள் நடப்பதே பிரச்னையாக இருக்கும் நிலையில், சண்டிகரை சேர்ந்த மூதாட்டி மான் கவுர் தனது 102வது வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார். இந்த மாத தொடக்கத்தில் ஸ்பெயின் நாட்டின் மலாகாவில் உலக  மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் 100 வயது முதல் 104 வயது வரையிலான பெண்கள் பங்கேற்றனர். இதில், மான் கவுர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாம்பியன்  பட்டத்தை வென்றார். இது தவிர, ஈட்டி எறிதல் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் போலந்தில் நடைபெற உள்ள உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன் போட்டிக்கும்  தயாராகி வருகிறார்.

அந்த போட்டியில் அவர் 60 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்பதற்கான பயிற்சியையும் தொடங்கி விட்டார். கடந்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற முதியோர் உலக சாம்பியன் போட்டியில் 100 மீ ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இது தொடர்பாக வீராங்கனை மான் கவுர் கூறியதாவது: கோதுமையால் ஆன 6 ரொட்டிகள் தான் எனது உணவு. நன்றாக சாப்பிட வேண்டும் அதற்கு தகுந்த உடற்பயிற்சியை மேற்கொள்வது எனது நீண்ட ஆயுள் மற்றும் சாம்பியன் பட்டத்தின் ரகசியம். அடுத்தத்து சாம்பியன்  பட்டங்களை பெற ஆவலாய் இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இவரது 80 வயது மகன் குர்தேவ் சிங்கும் சர்வதேச ஓட்டப் பந்தயம் மற்றும் தடகள போட்டியில் பங்கேற்றுள்ளார். அவர் தனது தாய் பற்றி கூறியதாவது: நான் தடகள போட்டிக்காக வெளிநாடு சென்றபோது பல பெண்கள் விளையாட்டு போட்டியில் பங்கேற்றதை கண்டு எனது தாயிடம் கூறினேன். எந்த நோய் பாதிப்பும் இல்லாத அவரை 100 மீ, 200 மீ ஓட்டப்போட்டிக்கு தயார்  செய்தேன். வரும் 2021ல் எனது தாய்க்கு 105 வயது ஆகும், அப்போது கூட ஜப்பானில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க ஆர்வமாக உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: