×

தவான், ரோகித் சதம் அடித்து அசத்தல் பைனலில் இந்தியா: சூப்பர் 4 சுற்று லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்றது

துபாய்: ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்று லீக் ஆட்டத்தில், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியில் ஹரிஸ் சோகைல், உஸ்மான் கான் நீக்கப்பட்டு முகமது ஆமிர், ஷதாப் கான் இடம் பெற்றனர். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.பாகிஸ்தான் தொடக்க வீரர்களாக இமாம் உல் ஹக், பகார் ஸமான் களமிறங்கினர். இமாம் 10 ரன் எடுத்து சாஹல் சுழலில் எல்பிடபுள்யு ஆனார். பகார் ஸமான் 31 ரன் எடுத்து குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பாபர் ஆஸம் 9 ரன் எடுத்து ரன் அவுட்டானார். பாகிஸ்தான் அணி 15.5 ஓவரில் 58 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், கேப்டன் சர்பராஸ் அகமது - சோயிப் மாலிக் ஜோடி 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி 107 ரன் சேர்த்தது. சர்பராஸ் 44 ரன் எடுத்து குல்தீப் சுழலில் ரோகித் வசம் பிடிபட்டார். சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த மாலிக் 78 ரன் விளாசி பூம்ரா வேகத்தில் விக்கெட் கீப்பர் டோனியிடம் பிடிபட்டார்.ஆசிப் அலி 30 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), ஷதாப் கான் 10 ரன்னில் பெவிலியன் திரும்பினர். பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன் குவித்தது. முகமது நவாஸ் 15, ஹசன் அலி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் பூம்ரா 10 ஓவரில் 1 மெய்டன் உட்பட 29 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 10 ஓவரில் 41 ரன் கொடுத்து 2 விக்கெட், சாஹல் 9 ஓவரில் 46 ரன்னுக்கு 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, இந்திய அணி 50 ஓவரில் 238 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தவான், ரோகித் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

ஆரம்பத்தில் இருந்தே அதிரடி ஆட்டம் காட்டிய இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது. இந்நிலையில் தவான் தனது ஒரு நாள் போட்டியில் 15வது சதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 210 ரன் ேசர்த்தது. துரதிர்ஷடவசமாக தவான் 114 ரன் இருந்தபோது ரன்அவுட்டானார். பின்னர் ரோகித் சர்மாவும் ஒரு நாள் போட்டியில் தனது 19வது சதத்தை அடித்தார். முடிவில் இந்தியா 39.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 238 ரன் எடுத்து வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. ரோகித் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 111 ரன் எடுத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Asia Cup Super, India ,Pakistan,wickets
× RELATED இன்று 5வது டெஸ்ட் தொடக்கம் தொடரை...