திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ம்தேதி தொடங்கி 21ம்தேதி வரை நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் புரட்டாசி மாதம் வெங்கடேச பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் இம்மாதம் முழுவதும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். இதற்கிடையில் பிரம்மோற்சவம் முடிந்தது முதல் வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகை, மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து அரசு விடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை மிகவும் அதிகளவு உள்ளது. நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இன்று காலையும் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகளவில் உள்ளது.

இதனால் அறைகள் கிடைக்காமல் ஏராளமான பக்தர்கள் சாலையில் காத்திருந்தனர். மேலும் வைகுண்டத்தில் உள்ள 31 அறைகள் நிரம்பியதால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 20 மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.  ரூ.300 டிக்கெட், நடைபாதையாக வந்து திவ்ய தரிசன டிக்கெட், ஆதார் கார்டு கொண்டு வந்த நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று 89 ஆயிரத்து 375 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ.1.66 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: