சென்னை வந்தடைந்தது மலேசிய மணல்...... அக்டோபர் முதல் விற்பனை தொடக்கம்

சென்னை: மலேசியாவில் இருந்து மணல் ஏற்றிவந்த கப்பல் சென்னை எண்ணூர் துறைமுகம் வந்தடைந்தது. நள்ளிரவு துறைமுகம் வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து மணல் இறக்கும் பணி தொடங்கியது. மலேசியாவில் இருந்து வந்துள்ள மணல் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த மணலை வீடு, வீடாக டோர் டெலிவரி முறையில்  விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக  தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மணல் தட்டுபாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.

இதற்காக, பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் அறிவிப்பு கடந்த மார்ச் 6ம் தேதி வெளியிடப்பட்டது.  அதன்படி, ரூ.548 கோடி மதிப்பில் 30 லட்சம் மெட்ரிக் டன் மணல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டது.  இந்த நிலையில், மலேசியாவின் பஹாங் மாநிலம் பீகான் துறைமுகத்தில் இருந்து 56,750 மெட்ரிக் டன் ஆற்று மணலை எம்.வி.அவ்ரலியா என்ற கப்பல் மூலம் எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்திற்கு கொண்டு  வரப்பட்டது.

இதை தொடர்ந்து செட்டிநாடு பல்முனை சரக்கு முனையத்தில் மணல் இறக்குமதி செய்யப்படுகிறது. கப்பல் மூலம் கொண்டு வரப்படும் மணல் 3 நாட்களில் இறக்கப்படவுள்ளது. அதை தொடர்ந்து அந்த மணலை ஒப்பந்த நிறுவனம்  சார்பில்  பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் அக்டோபர் முதல் வாரத்தில் மணல் விற்பனை செய்யப்படுகிறது. மணல் வேண்டி இணையதளத்தில் பதிவு செய்யப்படும் பொதுமக்களுக்கு நேரடியாக லாரிகள் மூலம் அவர்களது  வீட்டிற்கு சென்று மணல் விநியோகம் செய்யப்படுகிறது.

இதன் மூலம் கூடுதல் விலைக்கு மணல் விற்பனை செய்வது தடுக்கப்படும். மேலும், மணல் தேவைக்காக தனியார்களை அணுக வேண்டிய அவசியம் இல்லை.  இந்த மணல் விற்பனையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மணல் தட்டுபாடு குறையும். இந்த மணல் குறைந்த  விலையில் விற்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஓடிபியை சொன்னால் மட்டுமே மணல் சப்ளை

மணல் புக்கிங் செய்யும் நபர்களுக்கு ஓடிபி எண் தரப்படுகிறது. அந்த எண்ணை மணல் கொண்டு வரப்படும் நபரிடம் சொன்னால் மட்டுமே மணல் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மணல் சரியான நபர்களுக்கு சென்று விட்டது என்பது  உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம் மணல் இடையில் லாரிகளில்  கடத்தப்படுவது தடுக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: