தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் சர்ச்சை : ஆதார் வழக்கில் ஓரிரு நாளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு?

புதுடெல்லி,:  ஆதார் வழக்கில் ஓரிரு நாளில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய, மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஆதார் அட்டையை மத்திய அரசு கட்டாயமாக்கியது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட 27 வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை தொடர்ந்து நான்கு மாதங்களாக மொத்தம் 38 நாட்கள் விசாரித்தது. இதில், உச்ச நீதிமன்றத்தில் அதிக நாட்கள் விசாரிக்கப்பட்ட இரண்டாவது வழக்காக இந்த வழக்கு உள்ளது.  ஆதாருக்கு எதிரான வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ராகேஷ் திவேதி, ஷியாம் திவான், அரவிந்த் தாதர் ஆகியோரும், மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலும் ஆஜராகி வாதாடினார்கள். இதில் குறிப்பாக மத்திய அரசு தரப்பு வாதத்தில், புதிய சிம்கார்டு பெறுவதற்கும், அரசின் சலுகைகளைப் பெறுவதற்கும் ஆதார் கார்டு கட்டாயம் தான் என்பதை நியாயப்படுத்தி வாதிடப்பட்டது. மேலும், ஆதார் மூலம் மக்களுக்கு அரசின் நிதி முறையாக பகிர்ந்தளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆதார் அட்டையை மொபைல் போனுக்கும் அரசு கட்டாயப்படுத்தி உத்தரவை தவறாக அமல்படுத்தி விட்டதாகவும், மேலும், ஆதார் கட்டாயமாக்கும் சட்டத்தை நிதி மசோதாவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது சரியானது கிடையாது என நீதிபதிகள் மத்திய அரசு மீது குற்றம்சாட்டினர். இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே மாதம் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று தெரிகிறது.தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 2ம் தேதியுடன் முடிகிறது. இதற்கு முன்னதாக உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த அனைத்து வழக்கிலும் தீர்ப்பளிக்க அவர்  திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு கட்டமாகவே, முத்தலாக், ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் தீர்ப்பை  தீபக் மிஸ்ரா அமர்வு சமீப காலமாக ெதாடர்ந்து வழங்கியுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக  ஆதார் வழக்கின் தீர்ப்பையும் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: