ஸ்ரீரங்கம் கோயில் பாதாள அறையில் வைரம், வைடூரியங்கள் கொள்ளை?

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருப்பணி நடைபெற்றபோது பாதாள அறை உடைக்கப்பட்டு அதில் இருந்த வைரம், வைடூரியங்கள் மாயமானதாக புகார் எழுந்துள்ளது.  திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த 2015ல் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோயில் சிலைகள் மாற்றப்பட்டதாகவும், மூலவர் திருமேனியை மாற்றி விட்டதாகவும் புகார் எழுந்தது. இக்கோயிலில் மூலவர் திருமேனி மற்றும் கோயிலில் இருந்த ஏராளமான சிலைகள் திருடப்பட்டதாக பக்தர் ரங்கராஜ நரசிம்மன், ரங்கம் போலீசில் புகார் அளித்தார். போதிய முகாந்திரமில்லை எனக்கூறி போலீசார் அதை விசாரிக்கவில்லை.

இதையடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வழக்கை விசாரித்த நீதிமன்றம், 6 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க வேண்டும் என சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் விசாரித்து வருகிறார்.இதற்கிடையே கும்பாபிஷேக பணியின்போது கோயிலில் வேணுகோபால் சன்னதியில் இருந்த ரகசிய அறை உடைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இருந்த விலை உயர்ந்த நகைகள் மாயமாகி இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுபற்றி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதுபற்றி ரங்கம் கோயிலை நன்றாக அறிந்த பக்தர்கள் கூறுகையில், ஸ்ரீவேணுகோபால் சன்னதியில் 5 அடி அகலம், 8 அடி உயரம், 20 அடி நீளத்தில் ஒரு பாதாள அறை உள்ளது. அந்த அறையில் வைரம், வைடூரியம், தங்க நகைகள் அதிகளவில் உள்ளதாக எங்களது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். எனவே பாதாள அறையில் நகைகள் அதிகளவில் இருந்திருக்க வேண்டும். கும்பாபிஷேக திருப்பணியின்போது, பாதாள அறை கதவு திறக்கப்பட்டுள்ளது.  அறையில் இருந்த நகைகள் திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டும். அப்படி விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்’ என்று கேட்டுக் கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: