கிள்ளியூர், திருவட்டார் புதிய தாலுகாக்கள் : மாநகராட்சியாக நாகர்கோவில் தரம் உயர்த்தப்படும் - முதல்வர் அறிவிப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, நாகர்கோவிலில்  ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நேற்று நடைபெற்றது. விழாவில் ₹67.27 கோடி மதிப்பில் 14 ஆயிரத்து 911 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கடந்த 7 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் தமிழகம் சாதனை படைத்துள்ளது. குறிப்பாக 50 ஆண்டு காலமாக நீடித்த காவிரி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்துள்ளது. கடைமடை பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் செல்ல வில்லை என கூறுகிறார்கள். இதை கண்காணிக்க டெல்டா மாவட்டத்துக்கு மட்டும் சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். எந்தெந்த பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல வில்லை என்பதை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் தண்ணீர் கடலில் வீணாக செல்வதை தடுக்க பொதுப்பணித்துறையில் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து, ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வு அறிக்கை கிடைத்ததும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்வித்துறைக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் 76 கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. உயர் கல்வி படிப்பவர்கள் சதவீதம் தமிழகத்தில் 48.60 சதவீதமாக உள்ளது. பள்ளி கல்வித்துறைக்காக மட்டுமே இந்த அரசு ₹27,285 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அறிவியல் பூர்வமான கல்வி தமிழகத்தில்தான் அளிக்கப்படுகிறது. இதுபோன்ற சாதனைகள் எல்லாம் எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியவில்லை. இந்த அரசின் மீது பொய்யான விமர்சனங்களை வைக்கிறார்கள். கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதி. ஆண்டுதோறும், சுற்றுலா பயணிகள் 75 லட்சம் பேர் இங்கு வருகின்றனர். இதில் 22 லட்சம் பேர் மட்டுமே படகில் விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலா செல்கின்றனர். எனவே ₹6 கோடி மதிப்பில் விவேகானந்தர் பாறைக்கு செல்ல 2 புதிய படகுகள் வாங்கப்படும். மேலும் ஒரே சமயத்தில் 3 படகுகள் செல்ல கூடுதலாக படகணையும் தளங்கள் ₹20 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்படும். விவேகானந்தர் பாறையில் ரோப் கார் வசதி, விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே கடல் வழிபாலம் ₹120 கோடியில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும். விளவங்கோடு தாலுகாவை பிரித்து கிள்ளியூரை தலைமையிடமாக கொண்டு கிள்ளியூர் தாலுகா புதிதாக அமைக்கப்படும். இதனை போன்று கல்குளம் தாலுகாவை பிரித்து செருப்பாலூரை தலைமையிடமாக கொண்டு திருவட்டாறு தாலுகா அமைக்கப்படும்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் என்னை சந்தித்து பேசிய மாவட்டத்தை சேர்ந்தர்வர்கள் எல்லாம் நாகர்கோவிலை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கைக்கு இணங்க எல்லைகள் மறுசீரமைப்பு முடிந்ததும் நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.  விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பல்வேறு அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: