கருகும் பயிரை காப்பாற்ற திருவாரூரில் 9 கிராம விவசாயிகள் மறியல்

மன்னார்குடி: கருகும் சம்பா பயிரை காப்பாற்ற கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட  வலியுறுத்தி 9 கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கோட்டூரில் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம்  புழுதிக்குடி, சோழங்கநல்லூர், அகரவயல் உள்ளிட்ட  9 கிராமங்களில் நேரடி நெல் விதைப்பின் மூலம் சுமார் 750  ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, பயிர்கள் 60 நாட்களை  கடந்துள்ளது. கோட்டூர்  அருகில் ஓடும் முள்ளியாற்றில்  இருந்து பிரியும்   நீர், பொம்மை வாய்க்கால், பாப்பன் வாய்க்கால் ஆகிய இரு வாய்க்கால்கள்,   மேற்கண்ட 9 கிராமத்தின் வழியாக செல்கிறது.  இந்த நீரை நம்பித்தான் 9 கிராமங்களிலும் சம்பா பயிரிடப்படுகிறது. இந்த வாய்க்கால்களில் 800 கன அடி நீர்  திறந்து விட்டால் மட்டுமே கடைமடைகளுக்கு நீர் சென்று  சேரும். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெறும் 300 கன அடி நீரை  திறந்து விடுவதால்  கடைமடைகளுக்கு நீர் செல்லவில்லை. இதனால் பயிர்கள் நீரின்றி காய்ந்து கருக தொடங்கி உள்ளது.

 இந்தநிலையில்,  கருகும் சம்பா பயிரை காக்க பொம்மை மற்றும் பாப்பன் வாய்க்கால்களில் 800 கனஅடி நீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்துவிட வலியுறுத்தி 9  கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கோட்டூர் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கோட்டூர் போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது,  முள்ளியாற்றில் இருந்து  பொம்மை,பாப்பன்  வாய்க்கால்களில் வரும் 24ம் தேதி முதல்  தண்ணீர்   திறந்து  விடப்படும் என்று உறுதி அளித்தனர். இதையேற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: