பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 100 போலீசார் பாதுகாப்புடன் கோயிலுக்கு சென்ற எச்.ராஜா

தரங்கம்பாடி: பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா மீது பல வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஆனால் நேற்று, திருக்கடையூர் கோயிலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் எச்.ராஜா வந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கடந்த 15ம் தேதி நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேசும்போது, ‘‘தமிழ்நாட்டுல போலீஸ் துறை மொத்தமா லஞ்சமாகி போச்சு. வெட்கமா இல்ல. போலீசாரின் ஈரல் முழுசா கெட்டுப் போச்சு. யூனிபார்ம கழட்டிட்டு வீட்டுக்கு போயிருக்க வேணாமா? யூனிபார்ம் போடறதுக்கே உங்களுக்கு தகுதி இல்ல...’’ என்று ஆவேசமாக பேசினார். இதேபோல், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் கடந்த 17ம் தேதி இந்து முன்னணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா பேசுகையில், ‘‘திருவண்ணாமலையில் கோயில் நிலங்களை குடியிருப்பு பகுதிகளாக மாற்றி உள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான 50 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதிகாரிகள், கோயில் நிலங்களை லஞ்சம் வாங்கிக்கொண்டு விற்பனை செய்கின்றனர். இந்த அதிகாரிகள் தங்கள் வீட்டுப்பெண்களை விலை பேசி விற்பவர்கள் போலத்தான்...’’ என்று இழிவாக பேசினார்.

இதையடுத்து, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், எச்.ராஜாவை கைது செய்யக்கோரி போலீசில் புகார் அளித்தனர். இதனால், பல்வேறு மாவட்டங்களில் அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நீதித்துறையை அவமதிப்பு செய்துள்ள எச்.ராஜா மீது சென்னை ஐகோர்ட் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. இதன்பின், அவரை பிடிக்க திருமயம் போலீசாரால் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.6/.

100 போலீசார் பாதுகாப்பு: இந்தநிலையில், நாகை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில், எச்.ராஜாவின் உறவினருக்கு 60ம் கல்யாணம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு எச்.ராஜாவை ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூருக்கு பாதுகாப்பாக அழைத்து வந்தனர். திருக்கடையூரில் சீர்காழி டி.எஸ்.பி. சேகர் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு அளித்தனர். கோயிலில் எச்.ராஜா இருந்தபோது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், கோயில் வாசலில் அமர்ந்து அவரை கைது செய்யக்கோரி தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

விழாவில் கலந்து கொண்டபின், எச்.ராஜா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ``இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38,646 கோயில்கள் இருப்பதாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் 10,000 கோயில்கள் பூட்டப்பட்டு புதர்மண்டி கிடக்கிறது. அங்கு இருக்கும் சிலைகள் திருடப்பட்டுள்ளன. இப்படி சிலைகள் திருடு போவதற்கு அறநிலையத்துறை அதிகாரி உடந்தையாக இருந்து, கைதும் செய்யப்பட்டு உள்ளனர். ஊழல் நிறைந்த துறையாக அறநிலையத்துறை இருப்பதை வெளிக்காட்டியதற்காக என் மீது கோபமும், எரிச்சலும் கொண்டு ஒரு சில அதிகாரிகளை வைத்து காவல்நிலையங்களில் புகார் கொடுத்து உள்ளனர். நான் அவற்றை சட்டப்படி சந்திப்பேன். நான் இப்போது தலைமறைவாக இல்லை. என்னை பிடிக்க 2 போலீஸ் படை அமைத்து இருப்பது எனக்கு தெரியாது’’ என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: