பஸ் கட்டணம் உயர்வுக்கு பின்னும் டீசல் மானியம் நிறுத்தியதால் ரூ.1,800 கோடி கடன்

வேலூர்: கட்டணம் உயர்வுக்கு பின்னும், டீசலுக்கான மானியத்தை அரசு நிறுத்தியதால் போக்குவரத்து கழகத்திற்கு ₹1800 கோடி கடன் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, நெல்லை, விழுப்புரம் உட்பட 8 கோட்டங்கள் மூலம் 24 மண்டலங்களில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 70 சதவீதம் பஸ்கள் ஆயுட்காலம் முடிந்தும் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் 10 ஆண்டுகளாக கட்டண உயர்வு இல்லாததாலும், டீசல் விலை ஏற்றம், உதிரி பாகங்கள் விலை தொடர்ந்து ஏற்றம், பிற துறைகளை போல் அரசு தனியாக நிதி ஒதுக்காதது, சாலை வரி, டோல் கட்டணம், திறமையற்ற நிர்வாகம், இலவச பஸ் பாஸ்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்  போக்குவரத்து கழகங்களின் நிதி நிலைமை மோசமானது.

இதனால்  தொழிலாளர்களுக்கான பண பலன்ளை வழங்க முடியாதநிலை தொடர்கிறது. இதனால் தான் 8 கோட்டங்களை 4 கோட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு நெல்லையை மதுரை கோட்டத்துடன் இணைத்து  அரசாணை வெளியிட்டது.  மேலும் பஸ் கட்டணம் உயர்த்தியும் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதாவது, அரசு போக்குவரத்து கழகத்திற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக டீசலுக்கான மானியத்தை அரசு அளிக்காததால் தற்போது ₹1800 கோடி கடன் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுதொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த 2015ம் ஆண்டு டீசல் விலை ₹43.98 க்கு ேமல் விற்பனை செய்யப்பட்டால் அதற்கான மானியத்தை தமிழக அரசு தருவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, 2016ம் ஆண்டு டீசலுக்கான மானியத்தை போக்குவரத்து கழகத்திற்கு அரசு அளித்தது. ஆனால் 2016ல் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் டீசலுக்கான மானியத்தை அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

இதனால், டீசல் விலை ஏற்றத்தால் போக்குவரத்து கழகத்தில் பஸ்களின் செலவினம், பராமரிப்பு மற்றும் இதர பணிக்காக ஊழியர்களின் ஓய்வூதியத்தில் எடுத்து அரசு செலவு செய்தது. மேலும் டெப்போவை அடமானம் வைத்துள்ளது. தற்போது அரசு போக்குவரத்து கழகத்திற்கு ₹1800 கோடி கடன் உள்ளது. இதனால் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.   இவ்வாறு அவர்கள் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: