×

குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து குடிநீர் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை

புதுவண்ணாரப்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் இருசப்ப மேஸ்திரி தெரு, மார்க்கெட் பாரம் தெரு, செரியன் நகர், அசோக் நகர் உள்பட பல பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு, குடிநீர் வாரியம் சார்பில் குழாய் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், ஆங்காங்கே பைப்லைன் உடைப்பு காரணமாக பல மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதில் கடும் துர்நாற்றம் வீசுவதால், இதை பயன்படுத்த முடியாமல் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுபற்றி பலமுறைகுடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நேற்று காலை பொதுமக்கள் குடிநீர் பிடித்தபோது, குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது. இதனால், ஆத்திரடைந்த அவர்கள், பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர், செரியன் நகரில் உள்ள குடிநீர் வாரிய அலவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அப்போது, குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். பைப்லைனில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோஷமிட்டனர். பின்னர் அதிகாரிகள், அவர்களிடம் சமரசம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘குடிநீரில் கழிவுநீர் கலப்பது குறித்து தொகுதி எம்எல்ஏ டிடிவி.தினகரனிடம் கூறியதற்கு, எனது தொகுதி என்பதால், ஆளுங்கட்சியினர் எந்த பணிகளும் செய்வதில்லை. இந்த பிரச்னையை கோர்ட்டில் முறையிட்டு சரி செய்கிறேன் என ஆறுதல் கூறுகிறார். தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்கும்போது, பல வாக்குறுதிகளை கொடுத்தார். அந்த வாக்குறுதிகள் இப்போது காற்றில் போய்விட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, இந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தார். அதனால், அதிகாரிகள் பெயருக்காவது வேலை செய்தனர்.  ஆனால் இப்போது, அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. அதிமுகவினரும் கண்டு கொள்ளவில்லை,’’ என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Department of Water Board, Civilians, Siege
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...