தமிழகத்தில் 47 சதவீத காலிப்பணியிடங்கள் காடுகளை பாதுகாக்க மூச்சுத்திணறும் வனத்துறை: விலை உயர்ந்த மரங்கள், வன விலங்குகள் அழியும் கொடுமை

வேலூர்: தமிழகத்தில் 47 சதவீதம் காலி பணியிடங்களால் காடுகளை பாதுகாக்க முடியாமல் வனத்துறையினர் மூச்சு திணறுகின்றனர். இதனால் விலை உயர்ந்த மரங்கள், வன விலங்குகள் அழிந்து வருவதாக வன ஆர்வலர்கள்  வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் 22 ஆயிரத்து 877 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த காடுகளை பாதுகாக்கவும், கண்காணிக்கவும் வனக்காவலர், வனக்காப்பாளர், வனவர், வனச்சரகர் 24 மணிநேரமும் சுழற்சி முறையில்  பணியில் ஈடுபடுகின்றனர். இதில் வனக்காப்பாளர் பணியிடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.ஆனால், 5500 வனக்காப்பாளர்களுக்கு பதில் 3900 பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். இதேபோல், வனத்துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. அதன்படி, தமிழக வனத்துறையில் கிட்டத்தட்ட 47 சதவீதம் காலி  பணியிடங்கள் இருக்கிறது.

தினமும் 500 முதல் 1000 ஏக்கர் மட்டுமே ஒரு வனக்காப்பாளரால் கண்காணிக்க முடியும். ஆனால், காலி பணியிடங்களால் ஒவ்வொரு வனக்காப்பாளரும் 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை கண்காணிக்க  வேண்டியுள்ளது. இதனால், காடுகளை முழுமையாக கண்காணிக்க முடியவில்லை. விலை உயர்ந்த மரங்கள் மற்றும் வனவிலங்குகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘வனத்துறையில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளது. இதை நிரப்பாமல் வனத்துறையில் ஓய்வு வயதை 60 ஆக அதிகரிக்கும் ஆலோசனை நடந்து வருகிறது. இதனால்,  அனைத்து பணிகளும் அறைகுறையாகவும் முடிவடையாமலும் இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வனத்துறை காலி பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின்  கோரிக்கை’என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: